For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சாதி மறுப்பு திருமணம் நடத்தி வைத்ததற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் சூறை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

10:33 AM Jun 15, 2024 IST | Web Editor
சாதி மறுப்பு திருமணம் நடத்தி வைத்ததற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் சூறை   எடப்பாடி பழனிசாமி கண்டனம்
Advertisement

சாதி மறுப்பு திருமணம் நடத்தி வைத்ததற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் சூறையாடப்பட்டதற்கு அதிமுக பொதுச்செயலாளார் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் உள்ளது.  இங்கு கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது பெண், வேறு சமூகத்தை சார்ந்த இளைஞரை காதலிப்பதாக கூறி இருவரும் கட்சி அலுவலகத்தில் தஞ்சம் அடைந்தனர்.

இதனையடுத்து இந்த காதல் ஜோடிக்கு ஜூன் 13 அன்று கட்சி அலுவலக வளாகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் திருமணம் செய்து வைத்தனர். இதனை அறிந்த பெண்ணின் தந்தை மற்றும் 10-க்கும் மேற்பட்ட பெண்ணின் உறவினர்கள் பெண்ணை அழைத்துச் செல்ல கட்சி அலுவலகத்திற்கு வந்துள்ளனர். அப்பொழுது திருமணமான பெண் அவர்களுடன் செல்ல மறுத்ததால் கட்சி நிர்வாகிகளுடன் பெண் வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் பெண் வீட்டாருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கட்சியின் அலுவலகம், கண்ணாடி, இருக்கைகள், கதவு என அங்குள்ள பொருட்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்தது. பெருமாள்புரம் போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட நபர்கள் மீது 9 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  இதனைத் தொடர்ந்து சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணின் தாய் சரஸ்வதி தந்தை முருகவேல்,வெள்ளாளர் முன்னேற்றக் கழக அமைப்பு செயலாளர் பந்தல் ராஜா உட்பட 13 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகம் தாக்கப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..

” சாதி மறுப்பு திருமணம் நடத்தியதற்காக திருநெல்வேலி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்டுள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனம். தேசிய கட்சி அங்கீகாரம் பெற்ற ஒரு கட்சியின் அலுவலகம் தாக்கப்படுவது என்பதே இந்த திமுக ஆட்சியில் சீர்கெட்ட சட்டம் ஒழுங்கிற்கு ஓர் அத்தாட்சி.

சுயமரியாதை இயக்கம் தழைத்தோங்கிய தமிழ்நாட்டில், இன்றளவும் சாதிய தீண்டாமையால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வது வேதனைக்குரியது. நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தைத் தாக்கியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்குமாறு திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்” என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement