‘மிக்ஜாம்’ புயல் எதிரொலி: தனியார் நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை விடுவது குறித்து அரசு ஆலோசனை!
மிக்ஜாம் புயல் எதிரொலியாக ஐடி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு திங்கள்கிழமை விடுமுறை விடுவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கிமீ வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து, ‘மிக்ஜம்’ புயலாக வலுவடைந்துள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுப்பெற்று, வரும் 4-ம் தேதி காலைக்குள் தெற்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் மேற்கு மத்திய வங்கக்கடலை அடையும்.
சென்னையில் இருந்து 310 கி.மீ தொலைவில் தென் கிழக்கு திசையில் புயல் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னையில் அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில், அமைச்சர் கே கே எஸ் எஸ் ராமசந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:
”வங்ககடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 8:30 மணி அளவில் மிக் ஜாம் புயலாக மாறியது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அருகில் நாளை மாலை வரை கடற்கரை ஓரம் செல்லும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று மாலை முதல் நாளை மாலை வரை காற்று மழை இருக்கும். பொது மக்கள் இந்த நேரத்தில் தேவை இல்லாமல் வெளியில் செல்லாமல் இருக்க வேண்டும். இன்று காலை கூட முதலமைச்சர் 5 மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தினார். 162 முகாம்கள் சென்னையில் தயார் நிலையில் உள்ளது, மாநகராட்சி அதை கவனித்து வருகிறது.
அரசு என்ன தான் செயல்பட்டாலும் பொதுமக்களும் உடன் சேர்ந்து செயல்பட வேண்டும். 138 இடங்களில் சென்னையில் நீர் தேங்கியது. 38 இடங்களில் நீர் அகற்றப்பட்டது. 348 பேர் மணலி முகாமில் உள்ளனர். கடலுக்கு சென்ற மீனவர்கள் அனைவரும் பத்திரமாக திரும்பி உள்ளனர். மின்கசிவு காரணமாக உயிரிழப்பு ஒன்று அதிகரித்து உள்ளது. இன்று மாலை முதல் காற்று அதிகம் இருக்கும்.
செல்ஃபி எடுக்கும் வேலை எல்லாம் இல்லாமல் கவனமாக இருக்க வேண்டும். 76% நீர் செம்பரப்பக்கத்தில் உள்ளது. செங்குன்றத்தில் 84% நீர் உள்ளது. 68% பூண்டியில் நீர் உள்ளது. ஐடி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு திங்கள்கிழமை விடுமுறை விடுவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. 214 பம்பு செட்டுகள் தேங்கும் மழை நீரை வெளியேற்ற தயார் நிலையில் உள்ளது. 23 குழுக்கள் உள்ளது. 350 தமிழ்நாடு பேரிடர் மீட்பு படை, 575 பேர் என மீட்புப்படை அளவு கூடி உள்ளது.
951 அழைப்புகள் இதுவரை வந்துள்ளது. 818 தீர்வு காணப்பட்டுள்ளது. மற்றவை துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். 6 மனித உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது அவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 140 கால்நடை உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது அதிகபட்சமாக இதற்கு முப்பதாயிரம் வரை வழங்கப்படுகிறது. 52 குடிசை பாதிப்பு உள்ளது, பாதிக்கபட்ட குடிசைகளுக்கு 5000 ரூபாய் வழங்கப்பட உள்ளது.”
இவ்வாறு தெரிவித்துள்ளார்.