சென்னையில் போதைப் பொருள் விற்பனை - போலீசார் கைது!
சென்னை எழும்பூரில் 700 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் அருண்பாண்டியன் என்ற காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே, கிழக்கு மண்டல இணை கமிஷனர் தலைமையிலான தனிப்படையினர் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, 'ஹூண்டாய் ஐ - 20' காரில் வந்த பெண் உட்பட இருவரை பிடித்து விசாரித்தனர்.
பின்னர் காரில் சோதனை மேற்கொண்டதில் 700 கிராம் 'மெத்தபெட்டமைன்' போதைப் பொருள், 6 கிலோ கஞ்சா சிக்கியது. பறிமுதல் செய்யப்பட்ட கார், பத்திரிகையாளர் ஒருவரது என்பது தெரிய வந்தது. பாலசுப்பிரமணி, பாத்திமா என்று இரண்டு நபர்களையும் கைது செய்த எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் பழைய வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் நீதிமன்ற காவலராக பணியாற்றி வரும் அருண் பாண்டியனை போலீசார் கைது செய்துள்ளனர். பாலசுப்பிரமணி என்ற நபருக்கு மெத் போதைப்பொருளை சிறுக சிறுக கொடுத்தது விசாரணையில் தெரியவந்ததையடுத்து காவலர் அருண்பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுவரை சென்னையில் மெத் போதை பொருள் வழக்கில் பரணி, ஜேம்ஸ், ஆனந்த், சமீர் என நான்கு காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது ஐந்தாவது காவலராக அருண்பாண்டியன் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.