ராணிப்பேட்டையில் டிரோன்கள் பறக்க தடை... காவல் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு!
மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) உருவாக்கப்பட்டு 56 ஆண்டுகள் ஆவதை ஒட்டி, நாளை மறுநாள் (மார்ச் 7) ‘சிஐஎஸ்எஃப் தினம்’ கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அன்றைய தினம், ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையின் மண்டல பயிற்சி மையத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று கடற்கரை சைக்கிள் பேரணியைத் தொடங்கி வைக்கிறார். மத்திய அமைச்சர் அமித் ஷாவின் வருகையை ஒட்டி ராணிப்பேட்டையில் நாளை மற்றும் நாளை மறுநாள் (மார்ச் 6,7) ஆகிய 2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை விதித்து காவல் கண்காணிப்பாளர் விவேகாந்தா சுக்லா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
"நாளை (06.03.2025) மற்றும் நாளை மறுநாள் (07.03.2025) ஆகிய தேதிகளில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்பு படை (CISF) பயிற்சி மையத்திற்கு வருகை தர இருப்பதால் ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா 06.03.2025 07.03.2025 ஆகிய தேதிகளில் ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதையும் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ளார். மேலும் பாதுகாப்பு காரணமாக, டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.