சிறைகளில் ட்ரோன்கள் மூலம் கண்காணிப்பு; சிறைத்துறை தகவல் - ஒப்புதல் பெற தமிழ்நாடு அரசுக்கு கடிதம்
தமிழ்நாட்டில் உள்ள சிறைகளில் கண்காணிக்க ட்ரோன்களை பயன்படுத்த உள்ளதாக சிறைத்துறை கூறியுள்ளது. மேலும், ட்ரோன்கள் பயன்படுத்த ஒப்புதலை பெற தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.
தமிழ்நாட்டின் சிறைத் துறையின்கீழ் 9 மத்திய சிறைகள், 14 மாவட்ட சிறைகள், 96 கிளைச்
சிறைகள், 5 மகளிா் சிறப்பு சிறைகள், 12 பாா்ஸ்டல் பள்ளிகள், 3 திறந்தவெளி
சிறைகள், 3 சிறப்பு சிறைகள் என மொத்தம் 142 சிறைகள் உள்ளன.
இந்த சிறைகளில் சுமாா் 20,226 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். மேலும், அந்த கைதிகளில் சுமாா் 70 சதவீதம் கைதிகள் மத்திய சிறைகளில் உள்ளனா். இந்த நிலையில், சிறை துறையில் பல்வேறு தொழில்நுட்பங்களை டிஜிபி அம்ரேஷ் பூஜாரி அமல்படுத்தி வருகிறார்.
அந்த அடிப்படையில் வேலூர், திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களில் 100 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. சிறை காவலர்கள் மற்றும் சிசிடிவி கேமராக்களை கொண்டு கண்காணிப்பு பணி நடைபெற்று வரும் நிலையில் தற்போது ட்ரோன்களை பயன்படுத்தியும் மத்திய சிறைகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
இதனை தொடர்ந்து, கைதிகளிடையே மோதலை தடுக்கவும் , கஞ்சா போன்ற போதை பொருட்கள் மற்றும் செல்போன் உள்ளிட்டவை சிறைகளில் புழங்காமல் இருப்பதை தடுப்பதற்கும் இந்த ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதற்கான அனுமதி பெறுவதற்காக தமிழ்நாடு அரசிடம் கடிதம் அனுப்பி உள்ளனர்.
மேலும், டெண்டர் விடப்பட்டு முதற்கட்டமாக மத்திய சிறைச்சாலைகளில் ட்ரோன்
கேமராக்களை பயன்படுத்துவதற்கான நடவடிக்கையும் சிறைத்துறை அதிகாரிகள்
மேற்கொண்டு வருகின்றனர்.