ஒடிசாவில் 3 நாட்களாக நடைபெற்ற ஓட்டுநர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!
ஒடிசாவில் நடைபெற்றுவந்த ஓட்டுநர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட குற்றவியல் நடைமுறைச் சட்டங்களுக்கு பதிலாக சில திருத்தங்களுடன் மத்திய அரசு புதிய சட்டங்களைக் கொண்டுவந்தது. இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவற்றுக்கு பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா சட்டம், பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, பாரதிய சாக்சியா எனப் பெயர்மாற்றம் செய்தது.
இதில், பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில் ஹிட் & ரன் எனப்படும் விபத்து ஏற்படுத்திவிட்டுச் செல்லும் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.7 லட்சம் வரை அபராதமும் விதிக்க வழிவகை செய்கிறது. இதற்கு முன்பு 2 ஆண்டுகள் மட்டுமே தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி ஓட்டுநர்கள் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓட்டுநர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு சிலிண்டர் போக்குவரத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஒடிசாவில் நடைபெற்றுவந்த ஓட்டுநர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் திரும்ப பெறப்பட்டுள்ளது. ஒடிசா அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் என்று நம்புவதாகவும், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து பாதிக்கப்படுவதால் வேலைநிறுத்தத்தைத் திரும்ப பெறுவதாகவும் ஒடிசா ஓட்டுநர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் மூன்றாவது நாளாகத் தொடர்ந்து வந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.