மதுரையில் நாதக நிர்வாகி கொலை வழக்கு! முக்கிய குற்றவாளிகள் மேலும் 2 பேர் கைது!
மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியன் கொலை வழக்கில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் மேலும் 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாநகர் தல்லாகுளம் காவல்நிலைய எல்லையிலுள்ள சொக்கிகுளம் வல்லபாய் தெரு பகுதியில் ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொள்வார்கள். இந்நிலையில், கடந்த 16-ம் தேதி காலை அந்த பகுதியில் நாம் தமிழர் கட்சி வடக்கு தொகுதியின் துணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியதில் பாலசுப்பிரமணியன் உயிரிழந்தார்.
இதையடுத்து, தல்லாகுளம் காவல்துறையினர் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, நேற்று இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதையும் படியுங்கள் : தொடர் மழையால் நிரம்பிய பில்லூர் அணை – பவானி ஆற்றில் 3வது நாளாக வெள்ள அபாய எச்சரிக்கை!
ஏற்கனவே, இந்த கொலை வழக்கில் ஈடுபட்டிருந்த 4 பேர் கைதான நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மகாலிங்கம், அழகு விஜய் (தந்தை, மகன்) ஆகிய இருவரை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் தல்லாகுளம் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பரத், நாக இருள்வேல், கோகுலகண்ணன் மற்றும் பென்னி ஆகிய 4 பேரை காவல்துறையினர் தேடி வந்தனர். அப்போது, 4 பேரும் செல்லூர் ரயில் மேம்பாலத்திலிருந்து நடந்து சென்றதை அறிந்த காவல்துறையினர் பிடிக்க முயற்சித்து உள்ளனர். காவல்துறையினர் தங்களை பின்தொடர்வதை அறிந்த பரத், கோகுலகண்ணன் மற்றும் பென்னி ஆகிய 3 பேரும் ரயில் மேம்பாலத்தில் இருந்து குதித்துள்ளனர். அப்போது 3 பேருக்கும் காலில் முறிவு ஏற்பட்டது. இந்நிலையில், மூவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.