For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“வதந்திகளை பரப்ப வேண்டாம், வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர்” - துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி

பஞ்சாபில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கபடி போட்டியில் தாக்குதலுக்கு ஆளான வீராங்கனைகள் பாதுகாப்பாக இருப்பதாக என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
07:31 PM Jan 24, 2025 IST | Web Editor
“வதந்திகளை பரப்ப வேண்டாம்  வீராங்கனைகள் பாதுகாப்பாக உள்ளனர்”   துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி
Advertisement

2024-2025 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பெண்கள் கபடி போட்டி பஞ்சாபில் இன்று நடைபெற்றது. தமிழ்நாட்டிலிருந்து அன்னை தெரசா பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருந்து பெண்கள் கபடி அணியினர் பஞ்சாப் சென்றிருந்தனர்.

Advertisement

அங்கு, மதர் தெரசா பல்கலைக்கழகத்திற்கும், தர்பங்கா பல்கலைக்கழகத்திற்கும் இடையேயான கபடி போட்டி நடந்துகொண்டிருந்தது. இந்த போட்டியின்போது எதிர் அணியினர் மதர் தெரசா பல்கலைக்கழக அணியின் வீராங்கனை மீது பவுல் அட்டாக் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மதர் தெரசா பல்கலைக்கழக வீராங்கனைகள் நடுவரிடம் முறையிட்டனர்.

அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு நடுவரும் வீராங்கனைகளை தாக்கியதாக சொல்லப்படுகிறது. மேலும், இதுகுறித்து புகாரளித்த தமிழக அணியின் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இச்சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசு, பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் பாதுகாப்பாக இருக்கின்றனர் என்றும் சம்பவம் நடைபெற்று 3 மணி நேரத்திற்குள்ளாகவே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது என்றும் விளக்கம் அளித்திருந்தது. மேலும் மாணவிகள் அனைவரும் பாதுகாப்பாக திரும்ப பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழக பயிற்சியாளரை கைது செய்ததாக கூறுவது தவறு. அவர் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தது.

இந்தநிலையில் இச்சம்பவம் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் தமிழ்நாடு விளையாட்டு வீரர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,

“2024 - 2025 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழகங்கள் மத்தியிலான பெண்கள் கபடி போட்டி பஞ்சாபில் பதிலா மாவட்டத்தில் நடைபெற்றது. தமிழ்நாட்டில் இருந்து அன்னை தெரசா யுனிவர்சிட்டி பெரியார் பல்கலைக்கழகம் அழகப்பா பல்கலைக்கழகம் இதிலிருந்து 36 வீராங்கனைகள் பங்கேற்றனர்.

அதில் மதர் தெரசா பல்கலைக்கழகம் மற்றும் பர்கந்தா பல்கலைக்கழகத்திற்கு இடையே நடந்த போட்டியில் மதர் தெரசா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டு மாணவி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலமாக உடனடியாக சம்பந்தப்பட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு அனைத்து நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்து சொல்லியுள்ளார்.

போட்டி நடந்த போது புள்ளிகள் தொடர்பாக சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. அதனால் பதட்டமான சூழ்நிலை நிலவியது. தமிழக வீராங்கனைகளை பர்கிந்தாவிலிருந்து டெல்லி அழைத்துச் செல்ல பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது பதட்டமான சூழ்நிலை இல்லை. அனைத்து மாணவிகளும் தற்போது பாதுகாப்பாக உள்ளனர். யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். வதந்திகளை பரப்ப வேண்டாம். மாணவிகள் யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. சிராய்ப்பு மட்டுமே ஏற்பட்டு இருந்தது. இது போன்ற சம்பவங்கள் ஏதாவது ஒன்று நடைபெறும் பொழுது கண்டிப்பாக இன்னும் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்படும்”

இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement