"கடந்த தேர்தலில் இழைத்த தவறை மீண்டும் இழைக்காதீர்கள்" - மக்களின் காலில் விழுந்து அன்புமணி உருக்கம்!
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் நடைபெற்ற 'உரிமை மீட்க, தலைமுறை காக்க' நடைபயணத்தில் கலந்துகொண்டு, தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்டிய அவர், ஒரு வயது குழந்தை முதல் 80 வயது மூதாட்டி வரை எவருக்கும் பாதுகாப்பில்லை என்றும், தமிழ்நாட்டை திமுக ஆட்சி சின்னாபின்னமாக்கிவிட்டது என்றும் தெரிவித்தார். கடந்த தேர்தலில் இழைத்த தவறை மீண்டும் இழைக்க வேண்டாம் என்று மக்களின் காலில் விழுந்து கேட்டுக்கொள்வதாகவும் அவர் கூறினார்.
மேலும், ராணிப்பேட்டை மாவட்டம் கூலிப்படை கொலைகளுக்குப் பேர் போன மாவட்டமாகிவிட்டதாக சாடினார். வழக்கறிஞர் சக்கரவர்த்தியை சினிமா பாணியில் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்ததையும், மற்றொருவர் கொலை செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டி, சட்டம்-ஒழுங்கு என்ன ஆனது என்றும், முதலமைச்சர் என்ன செய்கிறார் என்றும் கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டில் கையாலாகாத ஆட்சி நடைபெறுவதாகவும், ஸ்டாலின் பூஜ்ஜியத்தில் ராஜ்ஜியம் செய்வதாகவும் விமர்சித்தார். திமுக ஆட்சிக்கு வந்த இந்த நான்கரை ஆண்டுகளில் எந்த துறைகளும் வளர்ச்சி அடையவில்லை என்றும், நீர்ப்பாசனத் திட்டம், புதியதாகத் தொடங்கப்பட்ட மாவட்டங்கள், மருத்துவக் கல்லூரிகள், வேலைவாய்ப்புகள் என அனைத்தும் பூஜ்ஜியம்தான் என்றும் அவர் கூறினார். இந்த பூஜ்ஜிய ஆட்சியை அகற்ற பொதுமக்கள் சபதம் ஏற்க வேண்டும் என்றும், இந்த ஆட்சியால் எந்தப் பலனும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.
சந்துதோறும் சாராயக் கடைகள் இருப்பதாகவும், கஞ்சா, அபின், ஹெராயின் போன்ற போதைப்பொருட்களை திமுகவினர் விற்பனை செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார். காவல்துறை சுதந்திரமாகச் செயல்படாமல், அவர்களின் கைகள் கட்டப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
சமூகநீதி என்ற வார்த்தையைச் சொல்ல ஸ்டாலினுக்குத் தகுதி இல்லை என்று கூறிய அன்புமணி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரமில்லை எனப் பொய் சொல்வதாகவும் விமர்சித்தார். பிற மாநிலங்களில் நடத்தி முடிக்கப்பட்ட விஷயத்தை தமிழகத்தில் ஏன் செயல்படுத்தவில்லை என்றும், இது கோழைத்தனம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
விவசாயிகளும், நெசவாளர்களும் படும் கஷ்டங்கள் ஸ்டாலினுக்குத் தெரியாது என்றும், ஸ்டாலின் பேசுவது வெறும் நாடகம் என்றும் அவர் கூறினார். இறுதியில், "இந்த மண்ணையும், மனிதர்களையும் நான் பாதுகாப்பேன்" என்று உறுதியளித்து தனது உரையை நிறைவு செய்தார்.