சமூக வலைதளங்களில் யாரையும் அநாகரீகமாக விமர்சிக்க கூடாது - அதிமுக ஐடி விங் நிர்வாகிகளுக்கு இபிஎஸ் அறிவுரை!
சமூக வலைத்தளங்கள் வாயிலாக செயல்படும் அதிமுகவினர் யாரையும் மரியாதை குறைவாகவோ, நாகரிகமற்ற முறையிலோ விமர்சிக்க கூடாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கான கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அதிமுக ஐடி விங்க் நிர்வாகிகள் 200 பேர் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில், கட்சி உறுப்பினர்களை தேர்தலுக்கு தயார்படுத்தும் வகையில் இந்த புத்தாண்டு தொடங்கிய பின், முதல் கூட்டமாக தகவல் தொழில்நுட்ப பிரிவினருடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இளம் தலைமுறை மற்றும் புதிய வாக்காளர்களை ஈர்க்கும் வகையில் சமூக வலைதளங்களில் சிறப்பான செயல்பாடுகளை மேம்படுத்த தனி கவனம் செலுத்துவதற்காகவும் எவற்றில் எல்லாம் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் கலந்து அறிவுறுத்தல்களை வழங்கினார். "புரட்சித் தமிழரின் MASTER CLASS" என்ற தலைப்பில் இந்த கூட்டம் நடைபெற்று வருகிறது. அதிமுக நாடாளுமன்றத் தேர்தலுக்கான செயல்பாடுகளில் சில மாதங்கள் முன்பே தொடங்கி செயல்பட்டு வரும் நிலையில், பூத் கமிட்டி பொறுப்பாளர்களை நியமித்து பூத் கமிட்டியை பலப்படுத்துதல் உள்ளிட்ட கூட்டங்கள் நடைபெற்றன. ஏற்கனவே நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் போதே பொங்கல் பண்டிகைக்கு பின் கட்சியின் பொதுச் செயலாளர் மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தகவல் தொழில்நுட்பப்பிரிவு ஆலோசனை கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
“கட்சிக்காக உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். தகவல் தொழில்நுட்பப் பிரிவு என்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. நீங்கள் எதற்காகவும் யாருக்காகவும் அஞ்ச வேண்டாம். உங்களுக்காக நான் எப்போதும் உடன் இருப்பேன். நிர்வாகிகளுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றுங்கள். சமூக வலைத்தளங்கள் வாயிலாக செயல்படும் அதிமுகவினர் யாரையும் மரியாதை குறைவாகவோ, நாகரிகமற்ற முறையிலோ விமர்சிக்க கூடாது. பிற கட்சிகளின் ஐடி விங் போல வெறுப்பை உண்டாக்க வேண்டாம். மீறினால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்த விவகாரம் என்றாலும் தன்னை நேரடியாக தொடர்பு கொள்ளலாம். சமூக வலைத்தளங்களில் நிர்வாகிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் உள்ளவர்கள் உங்களது செயல்பாட்டை மறைமுகமாக கண்காணிப்பார்கள். அதிமுக அரசின் சாதனைகளையும் திமுக அரசு செய்ய தவறியதையும் மக்களிடம் ஆக்கப்பூர்வமான முறையில் எடுத்து செல்ல வேண்டும்.”
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.