"அதிமுகவை தோழமை கட்சியாக பார்க்கிறாரா விஜய்?" - திருமாவளவன் எம்.பி. கேள்வி
திருச்சியில் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது,
"தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக கூறுவது எதிர்க்கட்சிகள் வழக்கமாக ஆளுங்கட்சி மீது வைக்கும் குற்றச்சாட்டுகளில் ஒன்று. அஜித்குமார் வழக்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுத்தார். அவரின் குடும்பத்தினரை தொடர்புக்கொண்டு ஆறுதல் தெரிவித்தார். சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் எதிர்க்கட்சிகள் வழக்கம்போல் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது என்று அரசியல் அணுகுமுறையே கையாண்டு வருகிறார்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் இபிஎஸ், திமுக எடுக்கும் நிலைப்பாடுகளுக்கு எல்லாம் அவர் கருத்து தெரிவித்து வருகிறார். அது அவருடைய பார்வை, அரசியல். அதை நாம் விமர்சிக்க முடியாது. திமுக முன்னெடுக்கும் முயற்சிகளை விசிக வரவேற்கும். ஓரணியில் தமிழ்நாடு யாருக்கு எதிராக? என்ற கேள்விகளை எழுப்புகிறது. தேசிய அளவிலான பார்வையுடன் கூடிய கருத்தாகத்தான் இதை நான் பார்க்கிறேன்.
அதிமுக, அதிமுக கூட்டணிக்கு எதிராக என்பதை விட, தேசிய அளவில் கல்விக்கு வழங்கக்கூடிய நிதியை கூட வழங்க மறுக்ககூடிய பாஜக அரசை எதிர்க்க, அவர்களின் சனாதன செயல்திட்டத்தை முறியடிக்க, தமிழ்நாட்டில் சன்பரிவார் அரசியல் நுழையாமல் தடுக்க ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஓரணியில் திரள வேண்டும் என்கிற பொருளில் சொல்வதாகத்தான் விசிக புரிந்துக்கொள்கிறது. பாமக இரண்டாக பிரிய வாய்ப்பே இல்லை. தந்தையும், மகனும் ஒருகட்டத்தில் ஒன்றுசேர்வார்கள் என்று நான் பெரிதும் நம்புகிறேன். ஒரே பாமகவாகத்தான் தேர்தலை சந்திப்பார்கள் என்றும் நம்புகிறேன்.
ஏற்கெனவே விஜய்க்கு Z பிரிவு பாதிகாப்பு வழங்கப்பட்டது. மிகவும் தாமதாக இந்த பாதுகாப்பை எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு வழங்குகிறது. இருப்பினும் அவரது பாதுக்காப்பிற்காக மத்திய அரசு எடுத்த நிலைப்பாட்டை விசிக வரவேற்கிறது. அதிக எம்.எல்.ஏ-க்களை கொண்டிருப்பதும், அதிக வாக்குகளையும் கொண்டிருப்பது அதிமுக தான். அப்படி உள்ள நிலையில் முதலமைச்சர் யார் என்பதை தேர்தலுக்குப்பிறகு தான் முடிவு செய்வோம் என்று கூறுகிற சூழ்நிலை இருந்தால் அது குறித்து இபிஎஸ் தான் பதில் சொல்ல வேண்டும்.
திமுக, பாஜக இரண்டு கட்சிகளை மட்டுமே கொள்கை எதிரிகள் என்று விஜய் அழுத்தமாக சொல்லி இருக்கிறார். அதிமுகவை பற்றி எதுவும் கூறவில்லை. அதிமுகவை தோழமை கட்சியாக விஜய் பார்க்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது. அதற்கு விஜய்தான் பதில் சொல்ல வேண்டும். பாஜகதான் சிவசேனாவை உடைத்தது. மாநில உரிமைகளுக்காக குரள் கொடுக்கும் கட்சிகளை இரண்டு, மூன்றாக உடைப்பது பாஜகவின் தந்திரங்களில் ஒன்று. அரசியல் ஆதாயத்திற்காக உடைக்கிறார்கள் என்பதை விட, மொழி வழி தேசியம் ஒருபோதும் அவர்களுக்கு ஆகாது. மாநில உரிமைகள் பேசுகின்ற கட்சிகளை பாஜக வளரவிடாது"
இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.