மத்திய அரசுக்கு இருப்பது இதயமா? அல்லது கல்லா? - அமைச்சர் துரைமுருகன் விமர்சனம்!
மத்திய அரசுக்கு இருப்பது இதயமா? அல்லது கல்லா? என வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்காத மத்திய அரசை அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் புதியதாக 22 பேருந்துகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இன்று நடைபெற்றது. இதனை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர் கூறியதாவது :
"கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு பல பேர் உயிரிழந்து கண்ணீர் கடலில் மிதக்கும் சூழலிலும் இதனை பேரிடராக மத்திய அரசு அறிவிக்காதது ஏன்? அவர்களுக்கு இருப்பது இதயமா? அல்லது கல்லா? என தெரியவில்லை" எனத் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள் : உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவியா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நச் பதில்!
மேகேதாட்டு விவகாரத்தில் அமைச்சர் துரைமுருகன் லஞ்சம் வாங்கிவிட்டார் என பாஜக தலைவர் அண்ணாமலை பேசியிருந்தது குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு; "நானும் கொஞ்சம் விவரம் தெரிஞ்சவர் என நினைத்திருந்தேன். ஆனால் இந்த அளவுக்கு கூட இல்லை என இப்போது தான் தெரிகிறது. விவரம் தெரிந்தவர்களுடன் பேசலாம் விவரம் தெரியாதவர்களிடம் என்ன பேசுறது" என பதிலளித்தார் அமைச்சர் துரைமுருகன்.