”ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ-யில் ஒப்படைக்க வேண்டும்” - எடப்பாடி பழனிசாமி..!
அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நாமக்கல் ஏ.எஸ் பேட்டையில் ’மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், “திமுக ஆட்சி 53 மாதகாலம் நிறைவேற்றி விட்டது. திறமையற்ற முதலமைச்சர் நாட்டை ஆண்டு கொண்டுள்ளார். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. நெல்லையில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் கொலை செய்யபடுகிறார். சென்னையில் ஆம்ஸ்ட்ராங் கொலை. எங்கு பார்த்தாலும் போதை பொருள், கஞ்சா போன்றவை விற்கப்படுகின்றன. தமிழகம் இந்தியாவில் போதை பொருள் நிறைந்த மாநிலமாகி விட்டது. மாநிலத்தில் கொலை, கொள்ளை ஆகியவை அதிகரித்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐயில் ஒப்படைக்க வேண்டும். உண்மையான குற்றவாளிகளை கண்டறிய வேண்டும். எதிர் கட்சிகள் நடத்தும் கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை. கரூர் உரிய பாதுகாப்பு அளித்திருந்தால் 41 பேர் பலி நடந்திருக்காது. அந்த உயிர்பலிக்கு காரணம் அந்த அரசு தான் காரணம்.
அதிமுக ஆட்சி காலத்தில் போராட்டங்கள் பொதுகூட்டம் நடத்த அனுமதி கொடுத்தோம். ஆனால் நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்று கரூரில் பொதுக்கூட்டம் நடத்தினோம். திமுக ஆட்சியில் குடிநீர் மின்கட்டணம், வீட்டு வரி உயர்த்தி கொள்ளையடிக்கப்படுகிறது. மதுரையில் 200 கோடி வரி மோசடி தொடர்பாக மேயரின் கணவரை கைது செய்துள்ளனர். நாமக்கல்லில் முட்டை, கைத்தறி, லாரி ஆகிய தொழில்கள் திமுக ஆட்சியில் பாதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.