“இந்தி திணிப்பில் தேவேந்திர ஃபட்னாவிஸ் காட்டிய எதிர்ப்பை பாஜக அரசு ஏற்கிறதா ?” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி!
புதிய தேசிய கல்விக் கொள்கையின்படி மாகாராஷ்டிரா மாநிலத்தில் 1ஆம் வகுப்பு முதல் மராத்தி மற்றும் ஆங்கில மொழியுடன் இந்தியை மூன்றாம் மொழியாகக் கற்பிப்பது கட்டாயமாக்கப்பட்டது. இதை அம்மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் இயக்குனர் ராகுல் அசோக் ரேகாவர் ஏப்ரல் 16 அன்று பள்ளி கல்வித் துறையால் இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று தெரிவித்திருந்தார். அதன் பின்னர் மகாராஷ்டிரா அரசும் அதை உறுதிப்படுத்தியது.
இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டதற்கு அங்குள்ள எதிர்க்கட்சிகள் கடும் எதிர்வினையாற்றி வந்த நிலையில், அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர ஃபாட்னாவிஸ் மாராத்தி மொழிதான் கட்டாயம், மற்ற மொழிகளை கூடுதலாக கற்றுக் கொள்ளலாம் என தன்னுடைய நிலைப்பாட்டை கூறினார்.
இந்த நிலையில் தேவேந்திர ஃபாட்னாவிஸின் நிலைப்பாட்டை பாஜக அரசு ஏற்கிறதா ? என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மாராட்டியத்தில் 3வது மொழியாக இந்தி மொழியை திணிக்க அம்மாநில முதலமைச்சர் ஃபட்னாவிஸ் எதிர்ப்பு தெரிவித்து மராத்தி மட்டுமே கட்டாயம் என அறிவித்துள்ளார். மராத்தி தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமில்லை என்ற அவரது நிலைப்பாட்டை மத்திய பாஜக அரசு ஏற்கிறதா?
NEPயின் படி 3வது மொழியை கட்டாயமாக கற்க வேண்டிய அவசியமில்லை என அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு தெளிவான உத்தரவை பிறப்பிக்குமா ? நாட்டுக்கான ரூ.2152 கோடியை நிறுத்தி வைத்துள்ளது என்ன காரணத்திற்காக?”
இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.