“மருத்துவர்கள் பொறுப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்” - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து!
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தைச் சேர்ந்த கணேசன், தனது மனைவி ருக்மணியை பரிசோதனைக்காக கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கிருக்கும் பெண் மருத்துவர், அப்பெண்ணின் வயிற்றில் இருந்த கருவைக் கலைத்து, குடும்பக்கட்டுப்பாடு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
இதனையடுத்து கடந்த 2011ல் மனைவியின் கருவைக் கலைத்து, குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த போது, கவனக்குறைவாக ஆக்சிஜனுக்கு பதிலாக நைட்ரஜன் ஆக்ஸைடு வாயுவை மருத்துவமனையில் அதிகமாக ஏற்றியுள்ளனர். இதனால் ருக்மணி உடல்நிலை பாதிக்கப்பட்டு கோமா
நிலைக்குச் சென்றார்.
பின்னர் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், 2012ல் ருக்மணி உயிரிழந்தார். இதுதொடர்பாக மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மீது வழக்கு பதியப்பட்ட நிலையில் மருத்துவர் ரவீந்திரன், விவேகானந்தன், பர்னபாஸ், ராஜ்குமார், தேவி, மாயகிருஷ்ணன் ஆகியோர் தங்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு
தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,“விதிகளை முறையாக பின்பற்றாமல், மருத்துவர்களும், ஊழியர்களும் மாறி மாறி குற்றம் சுமத்திக் கொண்டாலும், அது ஏற்கத்தக்கது அல்ல. அதோடு சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு ஆக்சிஜன் போன்ற வாயுக்களை வழங்கிய நிறுவனம் முறையான உரிமம் பெற்றது அல்ல. மருத்துவர்கள் உயிரை காப்பாற்றுவார்கள் என நம்பி நோயாளிகள் சொல்வதை எல்லாம் கேட்கின்றனர்.
ஆகவே மருத்துவர்கள் பொறுப்பு மற்றும் அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும். இந்த வழக்கில் குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் உள்ளது. ஆகவே, மனுதாரர்களின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. நாகர்கோவில் கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி இந்த வழக்கு விசாரணையை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.