"போலியான காரணத்தை சொல்லி மருத்துவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது" - அமைச்சர் #MaSubramanian பேட்டி
போலியான காரணத்தை சொல்லி மருத்துவர் பாலாஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில், பணியில் இருந்த புற்றுநோய்துறை மருத்துவர் பாலாஜி கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குத்திவிட்டு தப்பி ஓட முயன்ற 25 வயது விக்னேஷ் இளைஞர் மற்றும் மற்றொரு நபரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்காததால் ஆத்திரத்தில் தனது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து மருத்துவரை தாக்கியதாக போலீசார் விசாரணையில் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
பலத்த காயங்களுடன் மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே, அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் புறக்கணிப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மருத்துவர் சங்கத்தினருடன் தலைமை செயலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
பேச்சுவார்த்தை நிறைவடைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:
"சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது. விக்னேஷ் என்ற இளைஞர் மறைத்து வைத்திருந்த கத்தியின் மூலம் மருத்துவர் பாலாஜி மீது 7 இடங்களில் தாக்குதல் நடத்தியுள்ளார். மருத்துவர் பாலாஜி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர் பாலாஜி வீடியோ கால் மூலம் என்னிடம் உரையாற்றினார். அவர் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிறந்த சேவையாற்றியவர். விக்னேஷின் தாய் புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார். தனது தாய்க்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஷ் தாக்குதல் நடத்தியுள்ளார். இது மிகவும் கண்டனத்துக்குரியது.
மருத்துவர்கள் சிறந்த முறையில் பணியாற்றி வருகின்றனர். அவர் ஒரு போலியான காரணத்தை சொல்லி தாக்குதல் நடத்தியுள்ளார். விக்னேஷ் உடன் வேறு யாரேனும் வந்தார்களா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விக்னேஷ் மீது அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. சங்கங்களின் முக்கிய தலைவர்களை அழைத்து பேசினோம். சங்கத் தலைவர்கள் அவர்களின் எதிர்பார்ப்புகளை தெரிவித்தனர். மருத்துவமனைகளுக்கு போதுமான பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது அவர்களது முக்கிய கோரிக்கையாக இருந்தது.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் கடந்த மூன்று மாதங்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. மருத்துவமனைகளில் பெரும்பாலும் சிசிடிவி கேமராக்கள் உள்ளன. நோயாளிகளுடன் வரக்கூடிய நபர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர். மருத்துவ சங்கத்தின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வட மாநிலத்தவர்கள் அல்ல. பெருங்களத்தூரை சேர்ந்தவர்கள் தான். இது போன்ற சம்பவங்கள் இனி நடக்க இடம் கொடுக்கக் கூடாது."
இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.