"விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் சம ஊதியம் கிடைக்கிறதா?" - நாடாளுமன்றத்தில் கனிமொழி கருணாநிதி எம்.பி. கேள்வி!
திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, விளையாட்டு வீராங்கனைகளுக்கான சம ஊதியம் பற்றிய எழுத்துபூர்வமான கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்பினார்.
அதன்படி, “இந்திய விளையாட்டுத் துறையில் பாலின ஊதிய இடைவெளி குறித்து அரசாங்கம் அறிந்திருக்கிறதா? அப்படியானால், விளையாட்டு வாரியாக பெண்கள் மற்றும் ஆண்கள் பெறும் சராசரி ஊதியம் குறித்த விவரங்கள் என்ன?
பெண் விளையாட்டு வீராங்கனைகளுக்கான வளங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆண் விளையாட்டு வீரர்களுக்கு சமமாக ஒதுக்கப்படுவதை உறுதி செய்ய அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா, அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?
பெண்கள் விளையாட்டு போட்டிகளுக்கு ஊடக பிரதிநிதித்துவம் மற்றும் ஸ்பான்சர்ஷிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய செயல்படுத்தப்படும் நடவடிக்கைகள்; மற்றும் நாட்டில் பாலின ஊதிய இடைவெளியைக் குறைப்பதற்கும் பெண் விளையாட்டு வீரர்களுக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் குறிப்பிட்ட சட்ட அல்லது கொள்கை மாற்றங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா?” என கனிமொழி கருணாநிதி எம்.பி. கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இக்கேள்விகளுக்கு மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டாவியா எழுத்துபூர்வமாக பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது,
“ஆண், பெண் என்ற எந்த பாகுபாடும் இல்லாமல் ஒரே மாதிரியான வேலை அல்லது ஒரே மாதிரியான பணிக்காக ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஊதியம் வழங்குவதை உறுதி செய்யும் வகையில், அரசாங்கம் சம ஊதியச் சட்டம் 1976-ஐ இயற்றியுள்ளது. மேலும், ‘விளையாட்டு’ என்பது மாநில பட்டியல் ஆக இருப்பதால், நாட்டில் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஊக்குவிப்புக்கான முதன்மைப் பொறுப்பு மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளைச் சார்ந்தது. மேலும் மத்திய அரசு அவர்களின் முயற்சிகளுக்கு துணைபுரிகிறது. அதேநேரம், மத்திய அரசும் பல்வேறு விளையாட்டு ஊக்குவிப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
கேலோ இந்தியா - விளையாட்டு மேம்பாட்டுக்கான தேசியத் திட்டம், தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கு உதவி செய்யும் திட்டம், சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் அவர்களின் பயிற்சியாளர்களுக்கும் ரொக்க விருதுகள் வழங்குதல், தேசிய விளையாட்டு விருதுகள் வழங்குதல் ஆகியவற்றை மத்திய அரசு செய்கிறது. மேலும், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம், பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் தேசிய விளையாட்டு நலத்திட்டம், தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதி, இந்திய விளையாட்டு ஆணையம் மூலம் விளையாட்டு பயிற்சி மையங்கள் நடத்துதல் ஆகியவற்றையும் மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இந்தத் திட்டங்களின் விவரங்கள் https://yas.nic.in/ என்ற விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் கிடைக்கின்றன. கேலோ இந்தியா திட்டத்தின் கீழ், “பெண்களுக்கான விளையாட்டு” என்ற பிரத்யேக துணை திட்டம் உள்ளது. இந்தக் திட்டத்தின் கீழ், கேலோ இந்தியா அஸ்மிதா (செயல்பாட்டின் மூலம் பெண்களை ஊக்குவிப்பதன் மூலம் விளையாட்டு மைல்கல்லை அடைதல்) என்ற மகளிர் லீக் நடத்தப்பட்டு சமூக ஊடகங்கள் உட்பட பரவலான விளம்பரம் வழங்கப்படுகிறது. மேலும், NSDF-க்கு பெறப்படும் கார்ப்பரேட் பெரு நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு (CSR) நிதி கீழ் பெண்கள் உட்பட அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் விளையாட்டு மேம்பாட்டிற்கான செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது”
இவ்வாறு மத்திய அமைச்சர் மன்சுக் மண்டாவியா பதிலளித்துள்ளார்.