“மொழி, மதம், சாதியால் மக்களை பிரிப்பதே திமுகவின் நோக்கம்” - பிரதமர் மோடி விமர்சனம்!
காங்கிரஸ் மற்றும் திமுக நாட்டில் மொழி, மதம், சாதியால் பிரிவினையை ஏற்படுத்த பார்க்கிறது என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்வதற்காக 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று (ஏப். 9) சென்னை வந்தார். சென்னை தியாகராய நகர் பனகல் பூங்காவிலிருந்து, சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டார்.
அதைத் தொடர்ந்து இன்று வேலூர் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் (வேலூர்), கே.பாலு (அரக்கோணம்), செளமியா அன்புமணி (தருமபுரி), கே.எஸ்.நரசிம்மன் (கிருஷ்ணகிரி), அஸ்வத்தாமன் (திருவண்ணாமலை), கணேஷ்குமார் (ஆரணி) ஆகிய 6 வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று (ஏப். 10) காலை வேலூர் கோட்டை மைதானத்தில் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பேசினார்.
தொடர்ந்து, மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். நீலகிரி வேட்பாளர் எல்.முருகன், கோவை வேட்பாளர் அண்ணாமலை, பொள்ளாச்சி வேட்பாளர் கே.வசந்தராஜன், பாமகவின் சேலம் வேட்பாளர் ந.அண்ணாதுரை உள்ளிட்டோருக்கு பிரதமர் மோடி ஆதரவு திரட்டினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசியதாவது,
“அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்... கொங்கு, நீலகிரி தொகுதி எப்போதும் பாஜகவுக்கு ஸ்பெஷல் தான். ஏற்கனவே வாஜ்பாய் அரசுக்கு நீலகிரி தொகுதியில் எம்.பியை அனுப்பியுள்ளீர்கள். செல்லும் இடமெல்லாம் திமுகவுக்கு விடை கொடுக்கும் உத்வேகம் தெரிகிறது. அதனை பாஜக செய்யும்.
திமுக - காங்கிரஸ் கட்சிகளுக்கு ஒரே நோக்கம், பொய் சொல்லி ஆட்சியை பிடிக்க வேண்டும். இவர்கள் வறுமையை ஒழிப்போம் என கூறி இதுவரை சொல்லிவந்ததை பாஜக தான் செய்துள்ளது. காங்கிரஸ் - திமுக கூட்டணி பல தலைமுறைகளாக ஆட்சியில் இருந்துள்ளன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இன்னும் மின்சாரம், குடிநீர் கிடைக்கவில்லை. ஆனால் அதனை பாஜக அரசு தான் மாற்றியுள்ளது.
இந்த இரண்டு கட்சிகளும் வாரிசு அரசியலை செய்கிறது. ஆனால் பழங்குடியின பெண்ணை குடியரசு தலைவர் ஆக்கியது பாஜக. இந்தியா கூட்டணியில் இருப்பவர்கள் இந்தியர்களை நம்புவதில்லை. கொரோனா காலத்தில் மருந்து கண்டுபிடிப்பு செய்த போது நகையாடினர். ஆனால் கோடிக்கணக்கான மக்களுக்கு நமது தடுப்பூசி வழங்கப்பட்டது. கொரானோ காலத்தில் இந்தியாவின் பொருளாதாரம் பாதித்ததாக கூறினர். ஆனால் அதனை பல திட்டங்கள் மூலம் காப்பாற்றினோம்.
தமிழ்நாட்டில் ஏராளமான திறமைகள் உள்ளன. ஆனால் திமுக ஆட்சி மக்களின் திறன்களை வீணடித்து வருகிறது. திருப்பூர் உள்ளிட்ட தொழில்துறை நகரங்களில் மின் கட்டணத்தை உயர்த்தி விரோத போக்கை ஏற்படுத்துகிறது திமுக. நமது நாடு மேக் இன் இந்தியா என வளர்ந்து வருகிறது. ஆனால் திமுக அதனை முடக்க நினைக்கிறது. கோவைக்கு பாஜக அரசு தான் ராணுவ தளவாட தொழிற்சாலை கொண்டு வந்தது.
காங்கிரஸ் ஆட்சியில் மாநில கட்சிகள் உறவு வேறுபாடுகள் பார்க்கப்பட்டன. ஆனால் பாஜக அனைத்து மாநில அரசுகளுக்கும் நண்பனாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் பல லட்சம் கோடி ரூபாய் தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்கியது. கோவை உட்பட முக்கிய நகரங்களுக்கு வந்தே பாரத் ரயில்கள் வழங்கப்பட்டன. காங்கிரஸ் - திமுக ஆகிய கட்சிகள் நாட்டில் மொழி, மதம், சாதியால் பிரிவினையை ஏற்படுத்த பார்க்கின்றன.
ஜல்ஜீவன் திட்டத்தில் கோடிக்கணக்கான ரூபாய் மக்களுக்கு வழங்கினால், திமுகவினர் அவர்கள் ஆட்களுக்கு வழங்குகிறது. திமுக வெறுப்பு அரசியலை செய்கிறது. ஆனால் நான் உறுதி அளிக்கிறேன். மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைந்தவுடன் கோவை நீலகிரி வளர்ச்சிக்கு பாடுபடுவோம். இது மோடியின் கேரன்டி. சங்கமேஸ்வரர் கோயிலில் அசம்பாவிதம் நடந்தது. அதனை தடுக்க திமுக அரசு தவறியது.
அயோத்தி ராமர் கோயில் கட்டிய போது இந்தியா கூட்டணிக்கு பிடிக்கவில்லை. சனாதனத்தை ஒழிக்க திமுக போராடுகிறது. சுரண்டலுக்கும், ஊழலுக்கும் இன்னொரு பெயர் திமுக. 2ஜி-ல் ஊழல் செய்து நாட்டையே கேவலப்படுத்தியது திமுக. ஊழலை ஒழிக்க பாஜக முயன்று வருகிறது. ஊழலை ஆதரிக்கிறது திமுக. காங்கிரஸ் - திமுக ஒன்று சேர்ந்து கச்சத்தீவை தாரை வார்த்தது குறித்து அண்மையில் வெளிவந்ததை அறிவீர்கள். இந்த கூட்டணியின் செயலுக்கு தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்.
திமுக எப்போதும் அதிகார ஆணவத்துடன் உள்ளது. பாஜக தலைவர் அண்ணாமலையை பார்த்து யார் என கேட்பது ஆணவத்தை காட்டுகிறது. அண்ணாமலை முன்னாள் காவல் அதிகாரி. ஒரு சாதாரணமான குடும்பத்தில் இருந்து அரசியலில் முன்னுக்கு வருவது திமுகவுக்கு பிடிக்கவில்லை. இந்த தேர்தல் ஊழலையும், போதையையும், தேச விரோத சக்திகளையும் இந்தியாவில் இருந்து வெளியேற்றும் தேர்தல்”
இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.