டெல்லியில் நாளை நடைபெறும் யுஜிசி விதிகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் - ராகுல் காந்தி பங்கேற்பு!
பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள், கல்விப் பணியாளர்கள் நியமனம், பதவி உயர்வு குறித்து பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) புதிய வரைவு நெறிமுறைகள் வெளியிட்டது. இந்த புதிய வரைவு நெறிமுறைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மத்திய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், யுஜிசி-யின் புதிய வரைவு நெறிமுறைகளுக்கு எதிராக, தங்கள் மாநிலங்களின் சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்ற கோரி இந்தியா கூட்டணியில் உள்ள முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதன்படி கேரள மாநில சட்டபேரவையில் யுஜிசி- யின் புதிய விதிமுறைகளுக்கு எதிராக முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து யுஜிசியின் புதிய விதிமுறைகளுக்கு எதிராக திமுக மாணவரணி சார்பில் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் நாளை(பிப்.06) காலை 10 மணியளவில் ஆர்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நாளை நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் பங்கேற்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக திமுக மாணவரணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் டெல்லியில் பேட்டி அளித்துள்ளார். அதன்படி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் தி.மு.க மக்களவை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவிருப்பதாக தகவல் தெரிவித்துள்ளார்.