”காவிரி டெல்டா உழவர்களின் கண்ணீருக்கு திமுக பொறுப்பேற்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ் அறிக்கை..!
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு, நடப்பாண்டில் கிட்டத்தட்ட ஆறரை லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. வழக்கத்தை விட நடப்பாண்டில் விளைச்சலும் அதிகமாக கிடைக்கும் சூழல் நிலவிய நிலையில், அதைக் கருத்தில் கொண்டு மிகப்பெரிய அளவில் விற்பனைக்கு வரும் நெல்லை கொள்முதல் செய்ய தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அதை செய்வதில் தமிழக அரசு படுதோல்வி அடைந்து விட்டது.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை. மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் மொத்தம் 914 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தமிழக அரசு கூறுவதைப் போல ஒரு நாளைக்கு ஒரு கொள்முதல் நிலையத்தில் 1000 மூட்டைகள், அதாவது 40 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தால், செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் தீப ஒளி திருநாள் வரையிலான 50 நாள்களில் குறைந்தது 18 லட்சம் டன் நெல்லை கொள்முதல் செய்திருக்கலாம். முதல் 20 நாள்களை கணக்கில் கொள்ளாமல் கடந்த ஒரு மாதத்தில் இந்த அளவுக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டிருந்தால் கூட சுமார் 11 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இதுவரை 5.66 லட்சம் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சாத்தியமாகக் கூடிய அளவில் பாதியளவு கூட நெல் கொள்முதல் செய்யப்படாதது தான் உழவர்களின் துயரத்திற்கு காரணம் ஆகும்.
தஞ்சாவூர், திருவாரூர், நாகை. மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களில் மொத்தம் 59 கிடங்குகள் உள்ளன. இந்த மாவட்டங்களில் மொத்தம் 14 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மீதமுள்ள நெல்லை எங்கு சேமித்து வைக்கலாம் என்பதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், அந்த அடிப்படைக் கடமையைக் கூட திமுக அரசு செய்யவில்லை.
காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பெய்த மழையால் 2 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. அவற்றின் மதிப்பைக் கணக்கிட்டு உழவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கடந்த 22-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியிருந்தேன். ஆனால், அதன் மீதும் தமிழக அரசு இப்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உழவர்கள் நலனில் திமுக அரசு எந்த அளவுக்கு அக்கறையின்றி செயல்படுகிறது என்பதற்கு இதுவே சான்று ஆகும்.
காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் கடனாளிகளாக மாறாமல் தடுப்பது தமிழக அரசின் கைகளில் தான் உள்ளது. உழவர்கள் நலனில் தமிழக அரசுக்கு சிறிதளவாவது அக்கறை இருந்தால் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.