For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு இருக்கவேண்டும்!” - திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல்!

02:29 PM Apr 18, 2024 IST | Web Editor
“வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு இருக்கவேண்டும் ”   திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மடல்
Advertisement

வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும் என திமுக தொண்டர்களுக்கு அக் கட்சியில் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 

Advertisement

வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுகவினர் கவனத்திற்கு என்ற பெயரில் அவர் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18-வது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது.  இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து திமுக தொண்டர்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு,  தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து,  மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று,  வெற்றியை உறுதி செய்து,  தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22-ஆம் தேதி தீரர் கோட்டமாம் திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம்,  ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது.  நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன்.  களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு,  வாக்குகளாகப் பதிவாகி,  வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன்.  அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற,  வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும்.  அப்போதுதான்,  இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும்.

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் திமுக தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.  கட்சி நிர்வாகிகள் தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன்,  வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள்,  வாக்குச்சாவடி முகவர்கள்,  பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள்.

இதில் வாக்குச்சாவடி முகவர்கள்,  மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால்,  அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.  அதற்கான பயிற்சியினை நமது திமுக சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில்,  வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன்.

காகித வாக்குச் சீட்டுக்குப் பதில்,  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால்,  நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும்,  கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன.  அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும்.

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும்.  பாக முகவர்கள் உள்ளிட்ட தேர்தல் பணிகளை மேற்கொள்ளும் திமுகவினர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும்.  வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால் தான் வாக்கு எண்ணிக்கையின்போது திமுக கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும்.

விரைந்து களப்பணியாற்றி,  வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள்.  அதனால் மிகந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம்.  மகத்தான வெற்றியை ஈட்டுவோம்.

இவ்வாறு திமுக தலைவரும்,  தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அக்கட்சி தொண்டர்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

Tags :
Advertisement