For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"திமுக அமைச்சர்கள் பெண்களை ஏளனமாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது" - நயினார் நாகேந்திரன்!

திமுக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தனிப்பட்ட முறையில் தமிழகப் பெண்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
12:51 PM Aug 22, 2025 IST | Web Editor
திமுக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தனிப்பட்ட முறையில் தமிழகப் பெண்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
 திமுக அமைச்சர்கள் பெண்களை ஏளனமாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது    நயினார் நாகேந்திரன்
Advertisement

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார், அந்த பதிவில், "விருதுநகர் மாவட்டம் அருகே, தமிழக அரசின் மகளிர் உரிமைத் தொகை குறித்து கேள்வியெழுப்பிய பெண்களிடம் “மூக்கு, காதில் எல்லாம் இப்படி நகை போட்டிருந்தால் ரூ.1000 கொடுக்க மாட்டோம்” என திமுக அமைச்சர் ராமசந்திரன் பேசியிருப்பது சிறிதும் அரசியல் நாகரிகமற்ற செயல். தனது அரசுப் பதவியின் மாண்பினை மறந்துவிட்டு இதுபோன்ற கேலி, கிண்டல்களில் ஒரு அமைச்சர் ஈடுபடுவது கடும் கண்டனத்திற்குரியது.

Advertisement

“ஆட்சிக்கு வந்தால் அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை” எனக் கூறிய திமுக அரியணையில் அமர்ந்ததும் “தகுதியானவர்களுக்கு மட்டும் உரிமைத் தொகை” எனப் பாதிப் பெண்களைப் பட்டியலில் இருந்து நீக்கியது. தற்போது “நகை அணிபவர்களுக்கு பணம் கிடையாது” எனக் கூறி மீதி பெண்களையும் விரட்டப் பார்க்கிறது. திமுக அரசிடம் மகளிர் உரிமைத் தொகை வாங்க வேண்டுமென்றால் பெண்கள் தங்களிடமிருக்கும் ஆபரணங்களைக் கூட அணியக் கூடாதா?

பேருந்தில் இலவசமாகப் பயணிக்கும் பெண்களை “ஓசி” எனவும், மகளிர் உரிமைத் தொகை வாங்கும் பெண்களை “ரூ.1000-இல் கிரீம், பவுடர்லாம் வாங்கி பளபளன்னு இருக்கீங்க” எனவும், உரிமைத் தொகை வரவில்லை என முறையிடும் பெண்களை “மெண்டல்கள்” எனவும் நாக்கில் நரம்பின்றி வசைபாடும் திமுகவினர், நகைச்சுவை என்ற பெயரில் தொடர்ந்து பெண்களை மட்டம் தட்டுவதையும், உருவக்கேலி செய்வதையும் நாம் எப்படி அனுமதிக்க முடியும்?

எனவே, திமுக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தனிப்பட்ட முறையில் தமிழகப் பெண்களிடம் மன்னிப்பு கேட்பதோடு, இனியும் இதுபோன்ற விமர்சனங்களைத் திமுக தலைவர்கள் தவிர்ப்பதையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement