"சுதந்திரத்திற்கு பின் தமிழ்நாட்டில் நடைபெறும் மோசமான ஆட்சி திமுக" - டிடிவி தினகரன் விமர்சனம்!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருமங்கலம் தொகுதி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தொண்டர்களுக்கு தேர்தல் பணியாற்றுவது குறித்து ஆலோசனைகளை
வழங்கினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிடிவி தினகரன்,
அடுத்த முறை திமுக ஆட்சிக்கு வரவில்லை என்றால் அதற்கு காரணம் காவல்துறை என்ற கேள்விக்கு,
தேர்தல் வாக்குறுதியில் விவசாயிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், இளைஞர்கள் மாணவர்கள் மாற்றுத்திறனாளிகள் என சொன்ன வாக்குறுதிகள் எதையுமே நிறைவேற்ற வில்லை. காவல்துறை அதிகாரிகள் கொல்லப்படுகின்றனர் விசாரணை அழைத்துச் சென்றவர்கள் கொலை செய்யப்படுகிறார்கள் சுதந்திரத்திற்கு பிறகு இப்படி மோசமான ஆட்சி இல்லை என்ற சூழ்நிலைக்கு இந்த விடியா ஆட்சி உள்ளது.
அமமுக மாநாடு எப்போது நடைபெறும் என்ற கேள்விக்கு, "சரியான நேரத்தில் சரியான இடத்தில் அமமுக சார்பில் மாநாடு நடத்தும். வருகிற டிசம்பர் மாதத்திற்குள் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று உறுதியான முடிவெடுப்பார்கள் 2026 தேர்தல் சிறப்பாக நடைபெறும். தமிழகம் வரும் பிரதமரை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு தமிழகம் வரும் பிரதமரை இந்த முறை நான் சந்திக்கவில்லை. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தேர்தல் பிரச்சாரம் நான் செய்வேன்.
ஓபிஎஸ்ஸை கட்சியில் இணைத்துக் கொள்வீர்களா? என்ற கேள்விக்கு காலம் கடந்து விட்டது எனவும் டிடிவி தினகரனை கட்சியில் இணைத்துக் கொள்வீர்களா? என்ற கேள்விக்கு, காலம் பதில் சொல்லும் என,பேட்டி ஒன்றில் எடப்பாடி பழனிச்சாமி கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த தினகரன்,
இபிஎஸ் உடன் இணைவது காலம் பதில் சொல்லாது, உரிய நேரத்தில் நான் பதில் சொல்லுவேன் ஆறு மாதத்திற்கு பின் எல்லாம் இறுதியான பிறகு தெரியவரும். 2024 பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியுடன் நிபந்தனையற்ற ஆதரவுடன் சேர்ந்திருக்கிறோம் தேர்தல் வரப்போகிறது நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அங்கம் வகிக்கிறோம்.
உருட்டுகளும் திருட்டுகளும் என்ற தலைப்பில் அதிமுக பிரச்சாரம் செய்வது குறித்த கேள்விக்கு, "ஒரு கட்சியின் தலைவராக இருந்துவிட்டு இன்னொரு கட்சியின் பிரச்சாரத்தை பற்றி நான் பேசுவது கண்ணியமாக இருக்காது.
பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சியா என்ற கேள்விக்கு,
முதல் முறையாக மக்கள் கூட்டணி ஆட்சிக்கு வாக்களிக்கப் போகிறார்கள் ஆட்சி அதிகாரங்கள் எல்லோருக்கும் பகிர்ந்து அளிக்கும் போது தான் ஊழலற்றத் திட்டங்களை மக்களுக்கு நிறைவேற்ற முடியும் என்றார் அதற்கு நீங்கள் கூட்டணி ஆட்சி என்கிறீர்கள்.
ஆனால் அதிமுகவினர் தனித்து ஆட்சி என்று தொடர்ந்து சொல்லி வருகிறார்கள் என்பது குறித்த கேள்விக்கு,
நான் ஏற்கனவே கூறியுள்ளேன் அமித்ஷாவின் நிலைப்பாடுதான் என்னுடைய நிலைப்பாடு அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.