"நீட் தேர்வை வைத்து திமுக அரசியல் செய்கிறது" - இபிஎஸ் குற்றச்சாட்டு!
நீட் தேர்வை வைத்து இன்று வரை அரசியல் செய்யும் திமுக, தங்கள் ஆட்சியில் 20 பேர் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்துள்ளதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது? என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது,
"நீட் பயிற்சியில் அதிக மதிப்பெண் எடுக்க முடியாததால் சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் பகுதியைச் சேர்ந்த சத்யா என்ற மாணவி தன் உயிரை மாய்த்துக் கொண்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. நீட் தேர்வை வைத்து இன்று வரை அரசியல் செய்யும் திமுக, தங்கள் ஆட்சியில் 20 பேர் நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்துள்ளதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது?
"திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டில் நீட் தேர்வு இருக்காது" என்று வசனம் பேசிய உதயநிதி, இத்தனை மரணங்களுக்கும் மவுனம் சாதிப்பது ஏன்? தொடரும் நீட் மரணங்களுக்கு பொறுப்பேற்று, உங்களால் ஏமாற்றப்பட்ட தமிழ்நாட்டு மாணவர்களிடம் மன்னிப்பு கோருங்கள். தொடரும் நீட் மரணங்களைத் தமிழ்நாடு தாங்காது! நீங்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் துளியாவது இருந்தால், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை இனியேனும் மேற்கொள்ள வேண்டும் என திமுக அரசை வலியுறுத்துகிறேன்"
இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.