"திமுக மட்டும்தான் எங்களின் எதிரி" - இபிஎஸ் பரபரப்பு பேட்டி
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது "அதிமுகவின் கணக்கை யாரோ போடுகிறார்கள்" என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்திருந்தார். செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் பேசியதாவது,
"பட்ஜெட் கணக்கை சரியாக பாருங்கள். எங்கள் கணக்கை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீங்கள் எங்கள் மீது அக்கறை காட்ட தேவையில்லை. எங்கள் கணக்கை எவ்வாறு பார்க்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும். அதிமுகவை பொருத்தவரை கொள்கை என்பது வேறு, கூட்டணி என்பது வேறு. கொள்கை நிரந்தரமானது, ஆனால் கூட்டணி மாறும். அதிமுக ஒருபோதும் தன்மானத்தை இழக்காது. தமிழ்நாட்டு மக்களை பாதிக்கக்கூடிய எந்த திட்டமாக இருந்தாலும் அதனை எதிர்ப்பதில் முதன்மையாக இருப்போம்.
காவிரி நதிநீர் பிரச்னை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைபடுத்த மத்திய அரசு காலதாமத படுத்தியதால், நாங்கள் இருந்தாலும்கூட அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற அவையை 22 நாட்கள் ஒத்தி வைக்கின்ற சூழ்நிலையை உருவாக்கினார்கள். நிதி கிடைக்காதது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்க வேண்டும். கட்சி ரீதியாக எங்களின் எதிரி திமுகவை மட்டும்தான்"
இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.