For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“தேர்தலை பற்றி மட்டுமே திமுக யோசிக்கிறது" - அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்!

01:04 PM Jun 27, 2024 IST | Web Editor
“தேர்தலை பற்றி மட்டுமே திமுக யோசிக்கிறது    அதிமுக உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்
Advertisement

அதிமுகவின் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்,  தேர்தலை பற்றி தான் திமுக யோசிக்கிறது,  வருங்கால தலைமுறையினரை பற்றி யோசிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisement

கள்ளக்குறிச்சி விஷச்சாராய உயிரிழப்பு தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என அதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.  அதோடு, இதே கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினரை சஸ்பென்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.

இந்நிலையில் கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம் தொடர்பாக பேரவையில் பேச அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்தும்,  சட்டப்பேரவையில் இருந்து அதிமுக MLAக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சென்னை ராஜரத்தினம் அரங்கம் முன்பு அதிமுக சார்பில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது.  இதில் அதிமுக பொதுச்செயலாளரும்,  எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.ல்.ஏக்கள் அனைவரும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்றார்.  இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:

மக்கள் பிரச்னைக்கு குரல் கொடுக்கும் விதமாக அதிமுக செயல்பட்டு வருகிறது.  சட்டப்பேரவையில் மக்கள் பிரச்சினைகளை பேச ஆளும் திமுக அரசு மறுப்பதற்கு தேமுதிக சார்பில் கண்டனம் தெரிவிக்கிறோம்.  மக்கள் பிரச்சினைகளை பேச தான் சட்டமன்றமே தவிர வேறு எதற்கும் கிடையாது.  கள்ளக்குறிச்சி கள்ள சாராய விவகாரத்தில் 63 மரணங்கள் நடந்துள்ளது. நூற்றுக்கும் அதிகமானோருக்கு கண் பார்வை பறிபோயுள்ளது.

இது ஒட்டுமொத்தத்திற்கும் காரணம் திமுக தான் என்று கள்ளக்குறிச்சி மக்கள் சொல்கிறார்கள்.  திமுக உடந்தையோடு தான் கல்வராயன் மலையில் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சப்படுவதாக கள்ளக்குறிச்சி மக்களே சாட்சி சொல்கிறார்கள். இதுபற்றி சட்டமன்றத்தில் பேசாமல் வேறு எங்கு பேசுவது,  ஆனால் அங்கு பேசவிடாமல் தடுக்கிறார்கள்.

நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக பதவியேற்ற ராகுல் காந்தி பேசும் பொழுது,  முதல் கோரிக்கையாக எதிர்க்கட்சியை பேச அனுமதிக்க வேண்டும் என்று தான் கோரிக்கை வைக்கிறார்.  நாடாளுமன்றத்தில் ஜனநாயகரீதியாக எதிர் கட்சி குரல் ஓங்கி ஒலிக்க ஆதரவு கொடுக்க வேண்டும் என்றார்.  அப்போது திமுக எம்பிக்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்கிறார்கள்.

ஆனால் இங்கு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியான அதிமுக பேசினால் தடுக்கிறார்கள், அப்படி என்றால் நாடாளுமன்றம் என்றால் ஒரு நீதி சட்டமன்றம் என்றால் ஒரு நீதியா? ஒரு கண்ணில் சுண்ணாம்பு ஒரு கண்ணில் வெண்ணையா?

அதிமுகவினர் விளம்பரத்திற்காக தான் அவையை நடக்க விடாமல் தடுப்பதாக முதல்வர் கூறுகிறார்.  இன்று சட்டசபையில் வரலாற்றை புரட்டிப் பாருங்கள் இதுவரை அதிகமாக வெளிநடப்பு செய்தது,  அவை நடக்க விடாமல் செய்தது திமுக தான் என்று வரலாறு உள்ளது.

நாளை தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் ஆளுநரை சந்தித்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக மனு அளிக்க உள்ளோம். சிபிசிஐடி வழக்கை எடுத்து இதுவரை எதற்கு தீர்வு கிடைத்துள்ளது? உண்மை நிலை வெளியே வர வேண்டும் என்றால் இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்.  ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களே கள்ளச்சாராயம் காய்ச்ச உடந்தையாக இருந்திருக்கிறார்கள்.  அமைச்சர் முத்துசாமி காலையில் எழுந்து குடிப்பவர்களை குடிகாரர் என்று சொல்லக்கூடாது என்கிறார்.  உண்மையான பொறுப்பு இருந்தால் உங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுங்கள்.

40க்கு 40 அடுத்தது 200 கும் 200 வெற்றி பெறுவோம்,  விக்கிரவாண்டி தேர்தலில் டெபாசிட் இழக்க செய்வோம் என்று அடுத்தடுத்து தேர்தலை பற்றி தான் திமுக யோசிக்கிறது.  அடுத்த தலைமுறை மக்களை பற்றி யோசிக்கவில்லை.

ஒரு பக்கம் மணல் கொள்ளை,  கனிம வள கொள்ளை,  கள்ள சாராயம்,  கஞ்சா என பிரச்சினை உள்ளது.  இளைஞர்கள் மாணவர்கள் ஏன் குடிக்கு அடிமையாகிறார்கள் என்றால்,  வேலை இல்லை என்ற நிலை உள்ளது.  வேலையின்மை நிலையை மாற்ற வேண்டியது இன்றைய அரசின் கடமை.

2026 ஆம் ஆண்டு நிச்சயம் மகத்தான மாற்றத்தை அதிமுக தலைமையிலான கூட்டணி அமைக்கும்.  அதிமுகவுடன் கலந்து பேசி இந்த போராட்டத்தை அடுத்த கட்டமாக எப்படி கொண்டு செல்வது என்று ஆலோசிப்போம்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பொழுது எதற்கெடுத்தாலும் முன்னாடி சென்று நின்றவர், இப்போது வரை கள்ளக்குறிச்சிக்கு சென்று மக்களை பார்க்க வில்லை. 63 உயிர்கள் பறிபோயுள்ளது.  அதற்கு என்ன விளக்கம் கொடுத்துள்ளார்கள். இந்தக் கூட்டத் தொடர் முழுவதும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை சஸ்பென்ட் செய்யும் அளவுக்கு அதிமுக என்ன விதிமீறலில் ஈடுபட்டார்கள் என்று விளக்கம் கொடுக்க வேண்டும் இல்லையென்றால், போராட்டம் அடுத்த கட்டத்திற்கு செல்லும்.

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

Tags :
Advertisement