For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“திமுகவினர் சிறுபான்மையினர்களை ஆதரிப்பவர்கள் அல்ல, சந்தர்ப்பவாதிகள்” - ராமநாதபுரத்தில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை!

08:31 PM Apr 08, 2024 IST | Web Editor
“திமுகவினர் சிறுபான்மையினர்களை ஆதரிப்பவர்கள் அல்ல  சந்தர்ப்பவாதிகள்”   ராமநாதபுரத்தில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை
Advertisement

ஒரே ஒரு குடும்பத்துக்காக நடத்தப்படும் கட்சி திமுக எனவும் சிறுபான்மையினர்களை ஆதரிப்பவர்கள் திமுக அல்ல, சந்தர்ப்பவாதிகள் எனவும் ராமநாதபுரத்தில் நடைபெற்ற பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

Advertisement

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜெயபெருமாளை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஏப். 8) பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது,

“விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில் ராமநாதபுரம் மாவட்டத்தில் செழிக்க வேண்டும் என்பதற்காக, ஏராளமான திட்டங்களை அதிமுக அரசு வாரி வழங்கியது. மீனவர்களுக்காக ஏராளமான திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டன. ரூ.886 கோடி செலவில் 500 படகுகள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டது. மீனவ சமுதாயத்தை சேர்ந்த 3 வேட்பாளர்களை அதிமுக நிறுத்தியுள்ளது. 

நானும் ஒரு விவசாயி என்பதால், விவசாயிகளின் கஷ்டம் எனக்கு தெரியும். அவர்களது துன்பம் களைய ரூ.14,000 கோடியை மாநில நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்து காவிரி - குண்டாறு திட்டத்தைக் அதிமுக கொண்டுவந்தது. நான் முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த இந்த திட்டத்தை புதுக்கோட்டையில் தொடங்கி வைத்தேன். முதல்கட்டமாக ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டது. பிரமாண்டமான கால்வாய் கட்டப்பட்டது. 6000 கன அடி தண்ணீரை அந்த கால்வாயின் வழியே ராமநாதபுரம் வரை கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்டது அதிமுக ஆட்சியில்தான்.

ராமநாதபுரம் மக்களின் நலன் கருதி அதிமுக கொண்டு வந்த இத்திட்டத்தை,திமுகவினர் முடக்கிவிட்டார்கள். அவர்கள் உங்களிடம் வாக்கு கேட்டு வரும்போது கேளுங்கள், எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட காவிரி-குண்டாறு திட்டத்தை ஏன் முடக்கினீர்கள் என்று. காவிரி - குண்டாறு திட்டம் நிறைவேற்றப்படும்போது, 2 லட்சம் ஏக்கர் அளவு வேளாண்மைக்கும், குடிநீரும் கிடைக்கும். அதிமுக ஆட்சியில் 7300 கோடியில் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட்டது. மாணவர்கள் வழங்கப்பட்ட லேப்டாப் திட்டம் திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று அதிமுக ஆட்சி இருந்திருந்தால், அந்தத் திட்டம் முழுமை பெற்றிருக்கும். இப்பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு காவிரி தண்ணீர் கிடைத்திருக்கும். அதை தடுத்து நிறுத்தியது திமுக அரசும், முதலமைச்சர் ஸ்டாலினும் தான். ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை நாங்கள் கொண்டுவந்தோம். ஆனால் திமுகவால் 3 ஆண்டுகளில் ஒரு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொண்டுவர முடிந்ததா?. விரைவில் அதிமுக ஆட்சி அமையும், மக்களின் பிரச்னைகள் நீங்கும், திமுகவுக்கு தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும்.

1974-ல் மத்தியில் காங்கிரஸும் மாநிலத்தில் திமுகவும் இருந்தபோது மத்திய அரசு கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தது. அப்போது தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர் இதனை கண்டுகொள்ளவில்லை. கச்சத்தீவு ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமானது. இதனால் மீனவ மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.

இந்நிலை மாற கச்சத்தீவை மீண்டும் பெற வேண்டும். அப்போது தான் மீனவர்களின் பிரச்னை தீரும். ஆரம்பத்தில் இருந்து இன்று வரை கச்சத்தீவை மீட்க தொடர்ந்து போராடி வரும் ஒரே கட்சி அதிமுக. 2014-ல் மத்தியில் பாஜக ஆட்சியின்போது கச்சத்தீவை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார். 10 ஆண்டுகளாக மீனவர்களின் துன்பங்களை வேடிக்கை பாஜக பார்த்துக்கொண்டிருந்தது. மீனவர்களின் வாக்கைப் பெற இப்போது கச்சத்தீவை பற்றி பாஜக பேசி வருகிறது.

திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையேதான் தமிழ்நாட்டில் போட்டி. அதில் முன்னணியில் இருப்பது அதிமுகதான். 2026யில் அதிமுக அரசு அமையும். எம்ஜிஆர் மக்களுக்காக அதிமுகவை தொடங்கினார். ஆனால் ஒரே ஒரு குடும்பத்துக்காக நடத்தப்படும் கட்சி திமுக. திமுகவினர் சிறுபான்மையினர்களை ஆதரிப்பவர்கள் அல்ல. அவர்கள் சந்தர்ப்பவாதிகள்”

என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். 

Tags :
Advertisement