For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

"ஆயத்த ஆடை தொழில்களுக்கு ஊக்கமளிக்காமல் மத்திய அரசிடம் கையேந்தும் திமுக" - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

12:26 PM Aug 31, 2025 IST | Web Editor
 ஆயத்த ஆடை தொழில்களுக்கு ஊக்கமளிக்காமல் மத்திய அரசிடம் கையேந்தும் திமுக    எடப்பாடி பழனிசாமி கண்டனம்
Advertisement

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "பொறுப்பைத் தட்டிக்கழிப்பதிலும், அதை அடுத்தவர்கள் தலையில் ஏற்றி வைப்பதிலும், உலக அரசியல் தலைவர்களிலேயே முதல் இடத்தை வகிப்பவர்தான் திமுக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பதை அவரே பல விதங்களிலும் நிரூபித்து வருகிறார்.

Advertisement

அமெரிக்க அரசு தற்போது உயர்த்தியுள்ள இறக்குமதி வரியால் பாதிப்படைந்துள்ள திருப்பூர் பின்னலாடைத் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள் என்று பிரதமருக்கு, மு.க.ஸ்டாலின் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. 2021-ஆம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் இன்றுவரை, இவர் ஜவுளி மற்றும் பின்னலாடைத் தொழில்களுக்கு ஏற்படுத்திய இடையூறுகள், பிரச்சனைகள் ஏராளம். அதனால், அந்தத் தொழில்கள் ஏற்கெனவே நலிவடைந்துள்ளது என்பதே உண்மை.

வணிக நிறுவனக் கட்டடங்களுக்கு 150 சதவீதம் வரி உயர்வுடன், ஆண்டுதோறும் 6 சதவீத சொத்துவரி உயர்வு.

தொழில் நிறுவனங்களுக்கு பலமுறை கடுமையாக மின் கட்டணங்களை உயர்த்தியதுடன், கூடுதலாக பீக் ஹவர் கட்டணம் உயர்வு மற்றும் நிலைக் கட்டணம் உயர்வு.

365 கிலோ பருத்தி பேலின் விலை 50 சதவீதத்திற்கும் கீழே குறைந்தபோதும், நூல் விலையில் ஸ்திரமற்ற தன்மை நிலவிய போதும், எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாதது.

பருத்தி உற்பத்தியை ஊக்குவிக்க துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை.

வெளிநாட்டு சுற்றுப் பயணம் நான்கு முறை மேற்கொண்டும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் இயங்கும் ஜவுளித் தொழிலுக்கு எந்தவிதமான வெளிநாட்டு முதலீடுகளையும் ஈர்க்காதது.

இந்நிலையில், உள்நாட்டு முதலீடும் பிற மாநிலங்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் வகையில் மத்தியப் பிரதேச முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், கோவை மற்றும் திருப்பூருக்கு நேரடியாக வருகை தந்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் (TEA), தென்னிந்திய ஆலைகள் சங்கம் (SIMA) மற்றும் இந்திய பருத்தி கூட்டமைப்பு (ICF) ஆகியவற்றுடன் ஒப்பந்தம் மேற்கொண்டு, மத்தியப் பிரதேசத்தில் பருத்தி வளர்ச்சி வாரியத்தை நிறுவிடவும், எக்ஸ்ட்ரா லாங் ஸ்டேபிள் (ELS) பருத்தி உற்பத்தி மற்றும் பரப்பளவை அதிகரிக்கவும்,

மத்தியப் பிரதேசத்தின் ஆடைத் தொழிலுக்கான முதலீட்டு வாய்ப்புகளை ஊக்குவிப்பதோடு, ஆடை உற்பத்தி நிறுவனங்களின் வளர்ச்சியை எளிதாக்கவும், திறன் மேம்பாட்டு வசதிகளில் ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் SIMA மற்றும் ICF உடன் இணைந்து செயல்படும் வகையில் தமிழகத்தின் முதலீடுகள், வெளி மாநிலங்களுக்குச் செல்வதை வேடிக்கை பார்த்த அரசுதான் திமுக அரசு,

திமுக ஆட்சியில், மின் கட்டணம் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதாலும், கழிவு பஞ்சில் இருந்து தயாரிக்கப்படும் நூலிழைகளைப் பயன்படுத்தி காடா துணி, கலர் நூல்களில் போர்வை, மெத்தை விரிப்பு, லுங்கி, துண்டு, கால்மிதி உட்பட பல துணி வகைகளை தயாரிக்கப் பயன்படுத்தும் நூல்களை உற்பத்தி செய்யும் O.E. எனப்படும் ஓப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள், உற்பத்தி நிறுத்தப் போராட்டங்களை நடத்தின. இவர்களின் கோரிக்கைகளை திமுக அரசு கண்டுகொள்ளவே இல்லை.

இந்தியாவிலேயே தமிழ் நாட்டில், குறிப்பாக கோவை, ஈரோடு, திருப்பூர், கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் ஸ்பின்னிங் மில்கள், ஒப்பன் எண்ட் ஸ்பின்னிங் மில்கள் அதிக அளவில் உள்ளன. இந்த மில்கள் தமிழக மக்களுக்கு மட்டுமின்றி, பல லட்சக்கணக்கான வட மாநில மக்களுக்கும் அதிக அளவில் வேலை வாய்ப்புகளை வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதாரமாக விளங்கி வருகிறது.

ஆனால், திமுக அரசு, ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் வரிகளை உயர்த்தியும், அரசுக்குச் செலுத்த வேண்டிய கட்டணங்களை உயர்த்தியும், தொழில் முனைவோர்களையும், தொழிற்சாலைகளையும் முடக்கும் வகையில், கையாலாகாத திமுக அரசு, திறனற்ற வகையில் செயல்பட்டதன் காரணமாக தொழில் துறை ஏற்கெனவே நலிவடைந்து ஸ்தம்பித்துள்ளது.

இதன் காரணமாக, தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோயம்புத்தூரிலும், பின்னலாடை நகரம் மற்றும் டாலர் சிட்டி என்று அழைக்கப்படும் திருப்பூரிலும், உள்நாடு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளும், வியாபாரங்களும் மெதுவாக தமிழகத்தைவிட்டு ஏற்கெனவே 2022 முதல் வெளியேறத் துவங்கிவிட்டன.

ஆட்சியில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக 2021, கொரோனா காலத்தில்கூட சிறப்பாக நடைபெற்று வந்த ஜவுளி மற்றும் பின்னலாடைத் தொழில்கள், தற்போதைய திமுக ஆட்சியில், கடுமையான வரி உயர்வு மற்றும் தொழில் கொள்கையால் தள்ளாடி வருகிறது. திமுக ஆட்சியில், தமிழ் நாடு கெட்டுக் குட்டிச் சுவரானதை மறைக்க, எதற்கெடுத்தாலும் மத்திய அரசின் மீது பழிபோடும் ஸ்டாலின், அமெரிக்காவின் தற்போதைய வரி உயர்வால் கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரின் ஏற்றுமதி தொழில் பாதிப்படைந்துள்ளதாக நீலிக் கண்ணீர் வடிக்கிறார். உண்மையில் இந்த தி.மு.க-வின் 52 மாத கால ஆட்சியின் அலங்கோல செயல்பாடுகளால் கோவை, திருப்பூரில் பின்னலாடை, ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழில்கள் ஏற்கெனவே கடுமையாக பாதிப்படைந்துள்ளது என்பதே உண்மை.

அமெரிக்காவின் தற்போதைய கூடுதல் வரி விதிப்பால், நம் நாட்டில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாளர்களுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாத வகையில், மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதியை ஊக்குவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களுக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அண்மையில் நான் கடிதம் எழுதியுள்ளேன்.

மேலும் அக்கடிதத்தில், உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு உடனடி நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும், தொழில் துறைக்கு நிவாரணம் அளிக்க கடன் மற்றும் அதற்கான வட்டியினை 6 மாதங்களுக்கு நிறுத்தி வைக்கவும் மற்றும் வட்டியை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுத்து, தொழிலாளர்கள் வேலை இழப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் பாரதப் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளேன்.

அமெரிக்காவில் இந்தியப் பொருட்களை இறக்குமதி செய்பவர்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டும். இதனால், இந்திய பின்னலாடை அமெரிக்க சந்தையில் பிறநாட்டு ஜவுளிப் பொருட்களுடன் போட்டியிட முடியாமல் விற்பனை குறையும். எனினும் இங்கு, பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை தங்கு தடையில்லாமல் உற்பத்தியானால் தான் பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்ய முடியும்; நாட்டுக்கும் அந்நியச் செலாவணி கிடைக்கும். ஆயத்த ஆடை தொழிலில் ஏற்பட்டுள்ள தொய்வைப் போக்க இந்த திமுக அரசு உடனடியாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement