வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக மீது திமுக அவதூறு பரப்பி வருகிறது -இபிஎஸ் குற்றச்சாட்டு!
திமுக வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக மீது அவதூறு பரப்பி வருகிறது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மதுரை மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணனுக்காக மதுரை கே.கே.நகரில் அமைக்கப்பட்டு உள்ள தேர்தல் பணிமனை அலுவலகத்தை, அக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். நிகழ்வில் அதிமுக வேட்பாளர் சரவணன் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடியி பழனிசாமி கூறியதாவது:
அதிமுக கள்ளக்கூட்டணி வைத்துள்ளது என முதலமைச்சர் விமர்சனம் செய்வதற்கு அவரே விளக்கம் அளிக்க வேண்டும். இப்படி எல்லாம் யாரும் விமர்சனம் செய்ததே இல்லை. ஒவ்வொரு தேர்தல் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைக்கப்படுகிறது. பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்பும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுக மீது அவதூறு பரப்புகின்றனர். தோல்வி பயம் காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் அதிமுகவை அவதூறாக பேசி வருகிறார்கள்.
தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள்? யார் தோல்வி அடைவார்கள்? என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். அதிமுகவிற்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் மக்களிடம் அபரிவிதமான செல்வாக்கு உள்ளது”
இவ்வாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.