"தெளிந்த நீரோட்டமாக திமுக உள்ளது" - அமைச்சர் சேகர்பாபு பேட்டி!
சென்னை கொளத்தூரில் உள்ள ஜம்புலிங்கம் பிரதான சாலையில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக நவீன வசதி உடன் சுமார் 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம் கட்டுமான பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். உடன் மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் ஆணையாளர் குமரகுருபரன் உள்ளிட்ட மாநகராட்சி அதிகாரிகள் இருந்தனர்.
தொடர்ந்து கொளத்தூர் சோமையா தெருவில் புதிதாக கட்டப்பட்டு வரும் 10 வகுப்பறைகளை கொண்ட சென்னை உயர்நிலைப்பள்ளி கட்டிடம் கட்டும் பணியையும் அதனை தொடர்ந்து கொளத்தூரில் உள்ள ரங்கசாமி தெருவில் கட்டப்பட்டு வரும் சென்னை நடுநிலைப் பள்ளிக்கான கட்டிடங்களையும் அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி மேயர் பிரியா பேசுகையில், "கொளத்தூர் தொகுதியில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பாக நடைபெற்று வரக்கூடிய பணிகளை ஆய்வு மேற்கொண்டோம். சமுதாய நலக்கூடம், கூடுதலாக வகுப்பறைகள் தேவைப்பட்ட பள்ளிகளில் கட்டப்பட்டு வரும் வகுப்பறைகளையும் பார்வையிட்டோம் என தெரிவித்தார்.
ரிப்பன் மாளிகை முன்பாக தூய்மை பணியாளர்கள் போராட்டம் மேற்கொண்டு வருவது தொடர்பான கேள்விக்கு, "மண்டலம் 5, 6 களில் தூய்மை பணிகளை மேற்கொள்ள தனியாருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே சென்னை மாநகராட்சியில் உள்ள மண்டலம் 1, 2, 3 மற்றும் 9 முதல் 15 வரை உள்ள மண்டலங்களில் தனியார் மூலமாக தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தனியார் இடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தாலும் மாநகராட்சி பணிகளை கண்காணித்து வருகிறது. தனியாரும் மிகச் சிறப்பாக தூய்மை பணிகளை மேற்கொண்டு வருகிறது. 5, 6 மண்டலங்களில் பொதுமக்கள் அதிகம் இருப்பதால் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. நல்ல வகையில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப் பட்டிருக்கிறது என கூறினார். பணி பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.
தனியாரிடம் ஒப்படைத்தால் தங்களுடைய வேலை வாய்ப்பு போய்விடும் என்கின்ற கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். அதற்கான உத்தரவாதம் மாநகராட்சி சார்பாக கொடுத்து இருக்கிறோம். ஒவ்வொரு
பணியாளர்களுக்கும் பணி நிரந்தரத்தை உறுதி செய்து இருக்கிறோம். ஊதியம் குறைவாக கொடுக்கப்படுவார்களோ என அவர்கள் நினைக்கிறர்கள். தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டாலும் அவர்களுக்கான பிஎஃப் தொகை வழக்கமாக வழங்கப்படக்கூடிய ஊதியங்கள் அனைத்தும் முறையாக வழங்கப்படும் என தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை முன் ஏற்பாடுகள் பணிகள் குறித்தான கேள்விக்கு, "2022 ஆண்டு முதல் மழைநீர் வடிக்கால்வாய் பணிகள் நடைபெற்ற வருகிறது. முக்கியமான பகுதிகளில் மழைநீர் வடிக்கால்வாய் பணிகள் நிறைவு பெற்று உள்ளது. மாமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை ஏற்றார்போல் உட்புறபகுதிகளில் மழை நீர் பணி நடைபெற்று வருகிறது.
செப்டம்பர் வரை அனைத்து பணிகளுக்கும் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பருக்கு பிறகு எந்த ஒரு பணிகளும் தொடங்க வேண்டாம் என தெரிவித்துள்ளோம். மாநகராட்சி சார்பாக ஒவ்வொரு வார்டுக்கும் 5 பணியாளர்கள் கூடுதலாக நியமனம் செய்யப்பட்டுள்ளோம். மழைக்காலத்தில் கூடுதல் பணியாளர்களை நியமித்து பணிகளை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.
சென்னையில் கழிப்பறைகளில் ஊழல் நடத்துள்ளது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளது குறித்தான கேள்விக்கு, "பாஜக மாநில தலைவர் ஊடகத்தில் ஏதாவது பேச வேண்டும் எனவும் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் பேசி வருகிறார். மக்கள் தொகை அதிகம் இருக்கக்கூடிய சென்னை மாநகராட்சியில் இந்த அளவுக்கு வளர்ச்சி நோக்கி சென்று கொண்டிருக்கிறோம்" என கூறினார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, "வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என குற்றச்சாட்டுகளை சொல்லக்கூடாது. கடந்த காலங்களில் கட்டணம் கொடுத்து பயன்படுத்தி வந்த கழிப்பறைகளை இலவசமாக பயன்படுத்தும் அளவுக்கு தூய்மையாக அதனை கொடுத்து வருகிறோம். இந்த குற்றச்சாட்டு கூறிய அவர்களை உதாசீனப்படுத்துகிறோம் எனவும் குறைகளை சுட்டி காட்டினால் நிறைவு செய்ய மாநகராட்சி தயாராக இருக்கிறது".
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் மற்றும் ஓபிஎஸ் சந்தித்தது குறித்தான கேள்விக்கு, "தெளிந்த நீரோட்டமாக திமுக இருக்கிறது என்பதற்கு இதுவே ஒரு சான்று. முதல்வர் நேர்மையானவர் மனிதநேயமிக்கவர் என்பதற்கு எடுத்துக்காட்டு" என்று தெரிவித்துள்ளார்.