"அதிமுக, பாஜக கூட்டணி அமைந்தவுடன் திமுகவிற்கு பயம் வந்துவிட்டது" - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!
கோவையில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கிணத்துக்கடவு தொகுதி, சுந்தராபுரம் பகுதியில் பேசினார். அப்போது, "அதிமுக மக்கள் கட்சி, திமுக கருணாநிதி குடும்பத்தின் கட்சி. அதிமுகவில் உழைப்பவர்கள், தலைமைக்கு விசுவாசமாக இருப்பவர்கள் கட்சியிலும் ஆட்சியிலும் உயர் பொறுப்புக்கு வரமுடியும். திமுகவில் அப்படி வரமுடியுமா? கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதிக்கு அடுத்து இப்போது இன்பநிதியாம். 2026 தேர்தல் குடும்ப ஆட்சிக்கும் வாரிசு அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தல். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் முதல்வராகலாம்.
அதிமுகவில் சாதாரண நபர்கூட முதல்வராகலாம். திமுகவில் இப்படி ஸ்டாலின் சொல்ல முடியுமா? அதிமுக பலம் வாய்ந்த கட்சி. அதிமுக, பாஜக கூட்டணி அமைந்தவுடன் திமுக கூட்டணிக்கு பயம் வந்துவிட்டது. அதிமுக கூட்டணி வென்று அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். அம்மா மறைந்தபோது பிரச்னை வெடித்தது. எம்.எல்.ஏக்கள் வாய்ப்புக்கொடுத்து முதல்வர் ஆக்கினார்கள். அப்போது ஸ்டாலின், ஒரு வாரம் முதல்வராக இருக்க முடியாது, ஒரு மாதம் முதல்வராக இருக்க முடியாது என்று சொல்லிக்கொண்டு இருந்தார். ஆனால் நான்கு ஆண்டுகள் 2 மாதம் ஆட்சியில் இருந்தேன். அது, பொற்கால ஆட்சியாக இருந்தது. திமுகவின் 52 மாத ஆட்சியில் எங்கு பார்த்தாலும் ஊழல்தான்.
திமுக ஊழலின் ஊற்றுக்கண். ஊழலுக்காகக் கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு. ஆனால், அதிமுக மக்களுக்காக எம்ஜிஆர் தோற்றுவித்த கட்சி. அம்மா அவர்களும் அற்புதமான ஆட்சி கொடுத்தார். 31 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மதம், ஜாதி என்று யாரும் குற்றம் கண்டுபிடிக்க முடியாது. பாஜகவுடன் கூட்டணி வைத்ததைப் பற்றியே பேசுகிறார்கள். ஏன் திமுக, பாஜகவுடன் கூட்டணி வைக்கவில்லையா? எங்களைப் பொறுத்தவரை மக்கள் தான் நீதிபதி. 2026 தேர்தலில் திமுகவை வீழ்த்த மக்கள் தயாராகிவிட்டனர். கிணத்துக்கடவு 141வது தொகுதி. மக்களின் எழுச்சியில் அதிமுக கூட்டணியின் வெற்றியை கண் எதிரே
பார்க்கிறேன். இங்கே பார்ப்பது போலவே 141 தொகுதியில் 55 லட்சம் மக்களை சந்தித்துவிட்டு உங்களைக் காண வந்துள்ளேன்.
மக்களை நேரில் சந்தித்து புகாரை கேட்டு தேர்தலில் வென்று மக்களுக்கு நன்மை செய்வதுதான் எங்கள் எண்ணம். ஸ்டாலின் என்ன உழைத்து முதல்வரானாரா? அவங்க அப்பா முதல்வர், தலைவர், அவர் மூலம் தான் நீங்க வந்தீங்க. இங்கே வந்து நின்றால்தான் தெரியும். புரட்சித்தலைவர் எம்ஜிஆரைப் பார்க்கப் போவதற்கே கஷ்டப்பட்டு படிப்படியாக வளர்ந்து பொதுச்செயலாளர், முதல்வர் ஆகியிருக்கிறேன். உழைக்காத உங்களுக்கே இவ்வளவு தில்லு இருந்தால், உழைச்சு வந்த எங்களுக்கு எப்படியிருக்கும்? மக்கள் பிரச்னையை நான் நன்றாக உணர்ந்தவன், கஷ்டம் தெரியும். ஸ்டாலின் போல ராஜ வாழ்க்கை வாழவில்லை.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துவிட்டது. போதை விற்பனை அதிகரித்துவிட்டது. பொதுமக்கள் அடிமையாகி அழிவுப்பாதையில் செல்கிறது. சட்டமன்றத்தில் பலமுறை சொல்லிப்பார்த்தும் அரசு கண்டுகொள்ளவில்லை. இப்போது போதையின் பாதையில் செல்லாதீர்கள் என்று இப்போது சொல்கிறார். இன்றைக்குக் கூட போதை ஆசாமி விருதாச்சலத்தில் ரோட்டில் செல்பவரை வெட்டுகிறான். சிறுமி முதல் பாட்டி வரை பெண்களுக்கு பாதுகாப்பில்லை. காவல்துறைக்கே பாதுகாப்பில்லை. இந்த ஆட்சி இருக்கும் வரை அவரவர் குடும்பத்தை அவரவர் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
அதிமுக ஆட்சியில் கோவையில் எத்தனை பாலங்கள், சாலைகள், பூங்கா, கலை அறிவியல் கல்லூரி, குடிநீர் திட்டம் என்று ஏராளமான திட்டங்கள் கொடுத்தோம். ஒரேயாண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரியை சேர்த்து, அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சியில் 17 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவக் கல்லூரி கொண்டுவந்து சிறப்பான சிகிச்சை அளித்தோம். இந்த நான்காண்டுகளில் திமுக அரசால் ஒரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கூட கொண்டுவர முடியவில்லை. அதற்கு திறமை வேண்டும். ஒரு திறமையற்ற முதல்வர் நம்மை ஆள்கிறார்.
அதுமட்டுமல்ல, 67 கலை அறிவியல் கல்லூரி, 21 பாலிடெக்னிக் கல்லூரி, 4 பொறியியல் கல்லூரி, 7 சட்டக்கல்லூரி, 4 வேளாண்மைக் கல்லூரி, 5 கால்நடை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிலையம் என பல கல்லூரிகளைத் திறந்து இந்தியாவிலேயே உயர்கல்வியில் முதன்மை மாநிலம் என்ற இலக்கை 2019ம் ஆண்டிலேயே அடைந்துவிட்டோம்.
போக்குவரத்து துறை, மின்சாரத்துறை, சமூகநலத்துறை, உயர்கல்வி இப்படி பல துறைகளிலும் விருதுகளைப் பெற்றோம். அதுமட்டுமல்ல, இந்தியாவிலேயே தொடர்ந்து 5 முறை உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தேசிய விருது பெற்றது அதிமுக ஆட்சியின்போதுதான். மேலும், தமிழகத்தில் அதிக உணவு தானிய உற்பத்தியைப் பெருக்கி, தேசிய அளவில் ஐந்தாண்டுகள் கிருஷ்கர்மா என்ற உயர்ந்த விருதினைப் பெற்றது அதிமுக அரசு.
கிராமங்களில் வசிக்கும் ஏழை எளிய மக்கள் சிகிச்சை பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 2000 அம்மா மினி கிளினிக் தொடங்கினோம். திமுக அரசு ஏழைகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் காழ்ப்புணர்ச்சி பார்த்து, கிளினிக்கை மூடிவிட்டது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் 4000 அம்மா மினி கிளினிக் திறக்கப்படும். 168 கோடியில் வெள்ளலூரில் 62 ஏக்கரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் ஆரம்பிக்கப்பட்டு 50% முடிந்தது, இந்த ஆட்சியில் நிறுத்தப்பட்டது.
மீண்டும் அதிமுக ஆட்சியில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும். அதேபோல் நிறைய கோரிக்கைகள் கொடுத்திருக்கிறீர்கள். பாதாள சாக்கடை திட்டம் முடித்துக் கொடுக்கப்படும். குப்பைக்கிடங்கில் துற்நாற்றம் வருவதாகச் சொன்னார்கள் அதை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். மதுக்கரை முதல் நீலாம்பூர் வரையுள்ள பைபாஸ் சாலை 6 வழிச்சாலையாக அமைக்கப்படும். அத்தனை கோரிக்கையும் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும்" என்று தெரிவித்துள்ளார்.