"சமூகநீதி விடுதிகளை மூடிவிட்டு சமூக நீதி பேசுகிறது திமுக அரசு" - வானதி சீனிவாசன்!
பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில், மாணவ, மாணவிகள் சேர்க்கை இல்லாததால், 'சமூக நீதி விடுதிகள்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட 51 ஆதிதிராவிடர் நலப்பள்ளி விடுதிகள் மூடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலத்துறையின்கீழ் செயல்படும் 1,331 சமூக நீதி விடுதிகளில் 65,000-க்கும் அதிகமான, பள்ளி, கல்லுாரி, மாணவ - மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.
இதில் 100-க்கும் அதிகமான விடுதிகளில் புதிதாக மாணவ, மாணவிகள் சேரவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவர் சேர்க்கை இல்லாத மற்றும் 10-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள பள்ளி விடுதிகளை மூட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதன்படி, கோவை மாவட்டத்தில் 11 விடுதிகள், மதுரை மாவட்டத்தில் 10 விடுதிகள், புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 விடுதிகள் உட்பட தமிழ்நாடு முழுவதும் 51 விடுதிகள் மூடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் நடப்பு கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை இல்லாத 208 அரசு பள்ளிகள் மூடப்பட்டன. இப்போது, அதே 'மாணவர் சேர்க்கை இல்லை' என்ற காரணத்தைக் கூறி பட்டியலின மாணவ, மாணவிகளுக்கான 51 விடுதிகள் மூடப்பட்டுள்ளன. எந்த காரணத்தை கூறினாலும் பட்டியலின மாணவ, மாணவிகளுக்கான அரசு விடுதிகள் மூடப்பட்டதை ஏற்க முடியாது.
சுத்தமான, தரமான உணவு வழங்கப்படாதது, சுகாதாரமான, அன்பான, ஆதரவான சூழல் இல்லாதது போன்ற காரணங்களால் தான் இந்த விடுதிகளில் இருந்து மாணவ மாணவிகள் வெளியேறும் சூழல் ஏற்படுகிறது. புதிய மாணவர்களும் சேர்வதில்லை. பட்டியலின மாணவ, மாணவிகளுக்கான விடுதிகளில் மாணவர் சேர்க்கை இல்லை என்றால் அதற்கான காரணத்தை கண்டறிந்து அதை சரி செய்ய வேண்டும். மாறாக, அதையே காரணம் காட்டி விடுதிகளை முடிவிடக் கூடாது. 'சமூக நீதி விடுதி' என்று பெயர் மாற்றினால் மட்டும் போதாது. மாணவர்கள் ஆர்வமுடன் தங்கிப் படிப்பதற்கு ஏற்ற சுகாதாரமான, அன்பான, ஆதரவான சூழலை உருவாக்குவதே உண்மையான சமூக நீதி. ஆனால், சமூக நீதி விடுதிகளை மூடிவிட்டு சமூக நீதி பேசுகிறது திமுக அரசு.
பட்டியலின மாணவர்களுக்கான விடுதிகள் சரியில்லை என்றால், அவர்கள் படிப்பை பாதியிலேயே கைவிடும் சூழல் உருவாகலாம். இதை கவனத்தில் கொண்டு அரசு இந்த விடுதிகளை தொடர்ந்து நடத்த வேண்டும். அதற்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டும். பட்டியலின மக்களின் நலத்திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை அதற்கென செலவிடாமல், பொது திட்டங்களுக்கு திமுக அரசு செலவிட்டு வருவதாக ஏற்கனவே குற்றச்சாட்டு உள்ளது.
பட்டியலின மக்களுக்கான திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை, அதற்கென செலவிட முடியாத சூழல் ஏற்படும்போது, பட்டியலின மாணவர்கள் விடுதிகளை மேம்படுத்துவதற்கு அந்த நிதியை செலவிடலாம். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இப்பிரச்னையில் தலையிட்டு மூடப்பட்ட 51 விடுதிகளையும் மீண்டும் செயல்படுத்தவும், இனி எந்தவொரு விடுதியும், அரசு பள்ளிகளும் மூடப்படாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அரசு பள்ளிகளையும், அரசு விடுதிகளையும் மூடிவிட்டு 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்று சொல்லி எந்த பலனும் இல்லை என்பதையும் திமுக அரசு உணர வேண்டும்". இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.