#திமுக பவள விழா | சென்னை #YMCAமைதானத்தில் ஏற்பாடுகள் தீவிரம்... 75000 பேர் அமரும் வகையில் வசதிகள்!
திமுக சார்பில் வருடந்தோறும் நடக்கும் முப்பெரும் விழாவோடு இந்த ஆண்டு திமுக தொடங்கி 75 ஆண்டுகள் ஆனதையொட்டி பவள விழாவாக கொண்டாடப்படுகிறது. இதற்காக சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
திமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள், செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாள் மற்றும் திமுக தொடங்கப்பட்ட நாள் ஆகியவற்றை இணைத்து முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்தாண்டு திமுக தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததால், முப்பெரும் விழாவை பவள ஆண்டு விழாவாக வரும் செப்டம்பர் 17ஆம் தேதி சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தீவரமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, திமுகவின் முப்பெரும் விழாவில் கட்சியில் சிறப்பாக பணியாற்றுபவர்களை அடையாளம் காட்டும் விதமாக, 1985ஆம் ஆண்டு முதல் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கட்சியினர் மத்தியில் விருது பெறுபவர்கள் மிக கௌரவமாக பார்க்கப்படுகின்றனர். அதன்படி, இந்த ஆண்டிற்கான விருது பெறுபவர்களும் அறிவிக்கப்பட்டனர்.
அதில் , பெரியார் விருது - பாப்பம்மாள், அண்ணா விருது - அறந்தாங்கி நிஷா ராமநாதன், கலைஞர் விருது - எஸ்.ஜெகத்ரட்சகன் எம்பி, பாவேந்தர் விருது - கவிஞர் தமிழ்தாசன், பேராசிரியர் விருது - வி.பி.ராஜன் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல் புதியதாக விருது பட்டியலில் சேர்க்கப்பட்ட 'மு.க.ஸ்டாலின் விருதை' தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்துக்கு வழங்கப்படுகிறது.
மேலும், இந்த ஆண்டு பவள விழா ஆண்டு என்பதால், அதனை குறிக்கும் விதத்தில் 75 ஆயிரம் பேர் அமரும் வகையில் அரங்கு அமைக்கப்படுகிறது. அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் என அனைவருக்கும் தனித்தனியே பார்க்கிங் வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.