“திமுக, அதிமுக தமிழகத்திற்கு வேண்டாம்... இனி நாம் ஆள வேண்டும்...” - அன்புமணி ராமதாஸ் பேச்சு
தமிழ்நாட்டிற்கு திமுக, அதிமுக ஆட்சி வேண்டாம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மக்களவை தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ஏ.பி.முருகானந்தத்தை ஆதரித்து ஈரோடு மாவட்டம் பவானியில் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக தலைவர் அன்புமணி கலந்து கொண்டார்.
பின்னர் அவர் பேசியதாவது :
“வேட்பாளர் முருகானந்தத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது மருத்துவரின் அன்புக் கட்டளை. வேட்பாளர் முருகானந்தத்தை குறைந்தபட்சம் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும். திமுக, அதிமுக ஆட்சி செய்தது போதும். வரும் காலம் நம் கையில் உள்ளது. 57 ஆண்டுகளாக திமுக, அதிமுக கட்சிகளே மாறி மாறி ஆட்சி செய்து நாசம் செய்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க இந்த கூட்டணியை உருவாக்கியுள்ளோம். இந்த தேர்தல் வெற்றி மூலம், வரும் 2026 தேர்தலில் திமுக, அதிமுக இல்லாத கூட்டணி ஆட்சியை அமைப்போம்.இரண்டு கட்சிகளிடமும் எங்களுக்கு இடஒதுக்கீடு, சமூக நீதி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துங்கள், சாராய கடைகளை மூடுங்கள், போதையை ஒழியுங்கள், ஆற்றை காப்பாற்றுங்கள் என கெஞ்சினோம். என்னால் இதற்கு மேல் இவர்களிடம் போராட முடியவில்லை. நாம் அதிகாரத்திற்கு வந்து ஆட்சியை பிடிப்போம். தமிழகத்திற்கு திமுக, அதிமுக வேண்டாம். மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆண்டது போதும். இனி நாம் ஆள வேண்டும். இது காலத்தின் கட்டாயம். அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளால் தமிழகத்திற்கு எந்த பயனும் இல்லை. இனி நாம் நமக்காக வாக்களிப்போம்.”
இவ்வாறு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.