“திமுகவும் அதிமுகவும் வேறு வேறு அல்ல... இரண்டும் ஒன்று தான்...” - தேனி பரப்புரையில் அண்ணாமலை விமர்சனம்!
திமுகவும், அதிமுகவும் வேறு வேறு இல்லை, இரண்டும் ஒன்று தான் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தேனி மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரும், அமமுக பொதுச்செயலாளருமான டிடிவி தினகரனை ஆதரித்து தேனி பங்களாமேடு பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது :
“தமிழ்நாட்டில் அரசியல் மாறிக் கொண்டிருக்கிறது. 2026 ஆட்சி மாற்றத்திற்கான அடித்தளம் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போடப்பட்டிருக்கிறது. 10 ஆண்டுகள் பிரதமர் மோடியின் ஆட்சி எப்படி இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும். விளம்பரமே தேவையில்லாத ஆட்சி பாஜக ஆட்சி. திமுகவினர் விளம்பரம் செய்து, வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நாட்டை வளமாக்க பாஜகவுக்கு 400 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேவை. அதில் டிடிவி தினகரனும் இருக்க வேண்டும். தேனியின் குரலாக யார் இருக்க முடியும் என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். இந்தியாவை காக்க வாருங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். அவரிடம் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்ற தான் நாங்கள் முயற்சிக்கிறோம்.
இதையும் படியுங்கள் : தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி வழங்குவதில் தேர்தல் ஆணையம் பாகுபாடு – சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக வழக்கு!
திமுக, அதிமுக இரண்டும் ஒன்றுதான். தொண்டர்கள் வேறு வேறாக இருக்கலாம். இரண்டு கட்சிகளின் தலைவர்களும் ஒன்றுதான். டிடிவி தினகரனை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக இரண்டு கட்சி வேட்பாளர்களும் ஒன்று சேர்ந்துள்ளனர். ஏப்ரல் 19-ம் தேதி அதிமுக தொண்டர்களும் டிடிவி தினகரனுக்கு தான் வாக்களிக்கப் போகின்றனர்.”
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.