“2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி டெபாசிட் இழப்பார்கள்” - பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டி!
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி டெபாசிட் இழப்பார்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்திகளை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
“ஜாபர் சாதிக் வழக்கு சம்பந்தமாக நீதிபதி கேள்வி எழுப்பி உள்ளார். மூத்த நீதிபதி வழக்கில் இருந்து விலகுகிறேன் என்று கூறுவது வெளியில் இருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டிருக்குமா? என்ற சந்தேகம் எழுகிறது. ஒவ்வொரு முடிச்சும் வெளியில் வரும் பொழுது பல்வேறு உண்மைகள் தெரிய வரும். இதில் வேகமாக விடை தெரிய வரும் என தெரிகிறது. அவர் ஆளும் கட்சியை சேர்ந்த நபர். நீதிக்கு முன்பு தலை வணங்கி நிற்க வேண்டிய கட்டாயம் அனைவருக்கும் உள்ளது.
இந்த வழக்கில் விளக்கம் கிடைக்கும் வரை தனிப்பட்ட முறையில் எதுவும் கூற விரும்பவில்லை. சபாநாயகர் அப்பாவு திமுக கட்சிக்காரரை போல் செயல்படுகிறார். சபாநாயகர் அவரது இருக்கைக்கு நடுநிலைமையாக இருக்க வேண்டும். UGC நாமினி விவகாரத்தில் பாதிக்கப்படுவது மாணவர்கள் தான். இதுபற்றி திருமாவளவன் உள்ளிட்டோர் பேசாமல் குட்டையை குழப்ப பார்க்கிறார்கள்.
ஆளுநர் எங்கே அரசியல் செய்கிறார்? நீங்கள் தரும் கோப்புகளில் அவர் கையெழுத்து போடுகிறார். அமைச்சர்கள் தான் அரசியல் செய்கிறார்கள். நாங்கள் இஸ்லாமியர்களை தவறு என்று சொல்லவில்லை. தீவிரவாதிகளை தான் தவறு என்று சொல்கிறோம். காங்கிரஸ், திமுகவை விடவா சமூக நீதியில் பாஜக பின் தங்கியுள்ளது?. பத்திரிக்கையாளர்கள் திமுகவிற்கு எதிராக கருத்து தெரிவித்தால் NSA வழக்கு போடப்படுகிறது. என் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்றால் ஓட்டப்பத்தியத்தில் ஓடி வருவது போல் ஓடி வருவார்கள்.
அனைத்து மதமும் ஒன்று என்று கூறும் அரசியல்வாதி நான். தமிழக மக்கள் முதலமைச்சரை நாற்காலியில் இருந்து அகற்ற வேலைகளை ஆரம்பித்து விட்டார்கள். அண்மையில் நடைபெற்ற கொலை சம்பந்தமாக அமைச்சர் ரகுபதி கருத்து சொல்வதை போல் மோசமான ஒன்றை பார்த்ததில்லை. பாஜகவில் யார் எந்த ஆயுதத்தை வைத்துள்ளார்கள்? 2026ல் 200 தொகுதியில் திமுக கூட்டணி டெபாசிட் இழப்பார்கள். எழுதி வைத்து கொள்ளுங்கள்“ இவ்வாறு தெரிவித்தார்.