மதுரையில் தீபாவளி கடைசி நேர விற்பனை படுஜோர் - விளக்குத்தூண், மாசி வீதிகளில் அலைமோதும் கூட்டம்..!
தீபாவளி பண்டிகையையொட்டி, மதுரை விளக்குத்தூண் மற்றும் மாசி வீதிகளில் உள்ள சாலையோர கடைகளில் குறைந்த விலை துணி ரகங்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நாளை (நவம்பர் 12) உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பொதுமக்கள் புதுத்துணி எடுத்து, பட்டாசுகள், இனிப்புகள் வாங்கி ஆயத்தமாகி வருகின்றனர். இதனால் துணிக்கடைகள், பட்டாசுக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.
அந்த வகையில், மதுரை விளக்குத்தூண் மற்றும் மாசி வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அங்குள்ள சாலையோர கடைகளில் துணி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களின் விற்பனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடைசி நாள் விற்பனையாக பாய், தலையணைகள், கைலிகள், குறைந்த விலை துணி ரகங்கள், காலணிகள், கொசு வலைகள், முறுக்கு இயந்திரங்கள், காய்கறி வெட்டும் கருவிகள், குடைகள், டார்ச் லைட், கல் உரல், சப்பாத்தி கட்டை போன்ற வீடுகளுக்கு தேவையான பொருட்களின் விற்பனை சூடுபிடித்துள்ளது.
இதையும் படியுங்கள் : ‘சிக்கன்’ மீது இம்புட்டு ஆசையா... - கோமாவில் இருந்து எழுந்த தைவான் இளைஞர்..!
அதேபோல், பேன்சி ரகங்களான கவரிங் வளையல், கம்மல், நெக்லஸ், செயின் போன்றவற்றையும் சாலையோர கடைகளில் பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். கடைசி நாள் விற்பனை என்பதால், வியாபாரிகளும் மிகுந்த ஆர்வத்துடன் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர்.