Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரசாரத்தில் பிரிவினை ஏற்படுத்தும் வகையில் பேச்சு - பிரதமர் மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு!

12:28 PM May 08, 2024 IST | Web Editor
Advertisement

மதரீதியாக பிரிவினை ஏற்படுத்தும் வகையிலும், வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும் பேசியதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Advertisement

ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் செல்வங்களை இஸ்லாமியர்களுக்கு பங்கிட்டு கொடுத்து விடும், ஊடுருவல்காரர்களுக்கும், அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்பவர்களுக்கும் சொத்துக்கள் பகிர்ந்தளிக்கப்படும் எனப் பேசியிருந்தார்.

இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் பல தவறான தகவல்களைக் கூறி, ஒட்டுமொத்த மக்கள் மத்தியில் மதரீதியில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி,  தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அந்த மனுவில், “பிரதமர் மோடியின் வெறுப்பு மற்றும் மத பிரிவினை ஏற்படுத்தும் பேச்சு தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு பல தரப்பில் இருந்து புகார்கள் அளிக்கப்பட்ட போதும், தனிப்பட்ட முறையில் பிரதமருக்கு நோட்டீஸ் அனுப்பாத தேர்தல் ஆணையம், பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டும் நோட்டீஸ் அனுப்பியது மக்கள் மத்தியில் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும். அனைத்து மக்களுக்கும் நடுநிலையானவராக இருக்க வேண்டிய, குடிமக்களின் கண்ணியத்தை உறுதி செய்ய வேண்டிய பிரதமர், தரம் தாழ்ந்து விமர்சித்ததன் மூலம், பதவிப்பிரமாணத்தை அவர் மீறியுள்ளார். இது இந்திய ஜனநாயகத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு, விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அமர்வில் காங்கிரஸ் வழக்கறிஞர்கள் சூரியபிரகாசம் மற்றும் விக்டர் ஆகியோர் முறையீடு செய்தனர். அதற்கு, மனுவில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்து தாக்கல் செய்யும்படி, நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

Tags :
BJPcampaignChennai highcourtCongressINCNarendra modiNews7Tamilnews7TamilUpdatesSelvaperundhagai
Advertisement
Next Article