அதிமுக உடனான தொகுதிப் பங்கீட்டில் அதிருப்தி - பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக முடிவு?
மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஒதுக்க அதிமுக மறுப்பு தெரிவித்துள்ளதால், பாஜகவுடன் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்த தேமுதிக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களவை பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளை கட்சிகள் தீவிரப்படுத்தி வருகின்றன.
அந்த வகையில் தேசிய முற்போக்கு திராவிட கழகமும் தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் அதிமுக மூத்த நிர்வாகிகளான கே.பி.முனுசாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் சென்னை சாலிகிராமத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை அவரது வீட்டில் சந்தித்தனர்.
அதிமுக தரப்பில் தேமுதிகவிற்கு 4 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்துள்ளதாக தகவல் வெளியானது. கிருஷ்ணகிரி, விருதுநகர் தொகுதிகள் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், கடலூர், திருச்சி தேமுதிகவிற்கு ஒதுக்க அதிமுக தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல்கள் கசிந்தன.
இதையும் படியுங்கள் : ஆஸ்கர் விருது 2024 - வெற்றியாளர்கள் யார் யார்?
இந்நிலையில் இன்று தேமுதிக - பாஜக இடையிலான பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தை சாலிகிராமம் இல்லத்தில் சந்தித்து பாஜக மேலிடப் பொறுப்பாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சந்திக்க இருக்கின்றனர். மாநிலங்களவை உறுப்பினர் பதவி வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தேமுதிக உறுதியாக இருந்து வரும் நிலையில், பாஜகவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.