“சீமானின் அந்த புகைப்படத்தை எடிட் செய்ததே நான்தான்” - இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் சொன்ன அதிர்ச்சித் தகவல்!
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை கொள்கைத் தலைவர் என்று அரசியல் மேடைகளிலும் பல நேர்காணல்களிலும் பேசி வருகிறார். மேலும் அவரை சந்தித்த பிறகுதான் திராவிட சித்தாந்தத்திலிருந்து வேறுபட்டு தமிழ் தேசிய சித்தாந்தத்தை கடைபிடித்து அரசியல் செய்து வருவதாகவும் சீமான் கூறியிருந்தார்.
இதற்கிடையே, விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் உடன் சீமான் இருப்பதுபோல் இணையத்தில் இருக்கும் புகைப்படத்தை சுட்டிக்காட்டி, அவருடன் தனக்கு தொடர்பு இருப்பதாக சீமான் பல்வேறு தகவல்களைத் தெரிவித்து வருகிறார். அந்த தகவல்கள் அவ்வப்போது அரசியலில் பேசுபொருளாக இருந்தது வந்தது.
இந்த நிலையில், விடுதலைப் புலிகள் இயக்க தலைவருடனா சீமானின் சந்திப்பு நடக்கவில்லை என்றும் அவருடன் சீமான் இருப்பதுபோல் இணையத்தில் இருக்கும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்றும் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில், “இவர், அவரை சந்திக்கவே இல்லை. எதன் அடிப்படையில் சொல்கிறேன் என்றால் அந்த புகைப்படத்தை எடிட் செய்து கொடுத்தவன் என்கிற அடிப்படையில்” என பதிவிட்டுள்ளார். மேலும் சங்ககிரி ராஜ்குமார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனுடன் சீமான் இருக்கும் புகைப்படத்தை அவர் தான் எடிட் செய்ததாக தெரிவித்தார். இச்சம்பவம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.