"சொகுசு காரை அனுப்பவில்லை" - ஊழியரை தாக்கிய ஒடிசா ஆளுநரின் மகன்!
ஒடிசா ஆளுநரின் மகன் ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரரை தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸின் மகன் லலித் குமார். இவர் கடந்த 7ம் தேதி இரவில் ரயில் நிலையத்தில் இருந்து ஆளுநர் மாளிகைக்கு செல்ல காரை அனுப்பி வைக்கச் சொல்லியிருக்கிறார். இதனையடுத்து ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரரான பைகுந்த்நாத் பிரதான் லலித் குமாருக்காக காரை அனுப்பியிருக்கிறார். அவர் அனுப்பிய காரில் ஆளுநர் மாளிகை வந்தடைந்த லலித் குமார், அன்றிரவு 11.45 மணியளவில் பிரதானை தனது அறைக்கு அழைத்திருந்தார்.
பின்னர் தன்னை அழைக்க சொகுசு காரை அனுப்பாமல், சாதாரண காரை அனுப்பியதாக கூறி லலித் குமாரும், அவரது நண்பர்களும் சேர்ந்து பிரதானை தாக்கியுள்ளனர். மேலும், அவர்கள் லலித்தின் செருப்பை நாக்கால் சுத்தம் செய்யுமாறு பிரதானை வற்புறுத்தியுள்ளனர். இதுகுறித்து பிரதான் ஆளுநரிடம் புகார் அளித்திருக்கிறார். ஆனால் ஆளுநர் இதனை கண்டுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பிரதான் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அவர்கள் வழக்குப்பதிவு செய்யாமல், இதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் ஆலோசித்த பிறகு நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இந்த நிலையில், பிரதானின் மனைவி இதுகுறித்து செய்தி நிறுவனங்களிடம் புகார் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "பிரதான் மற்றும் எங்களின் குடும்பத்தினர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த சம்பவத்திற்குப் பிறகு மிகவும் அச்சத்தில் உள்ளோம்" என்று தெரிவித்துள்ளார்.