அதிமுக சார்பில் கூட்டணிக்கு அழைப்பு வந்ததா? - அன்புமணி ராமதாஸ் பதில்!
அதிமுக சார்பில் கூட்டணிக்கான அழைப்பு வந்ததா என்பது குறித்து அன்புமணி ராமதாஸ் விளக்கம் அளித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. சென்னை எழும்பூர் ருக்மணி லட்சுமிபதி சாலையில் உள்ள தனியார் அரங்கில் காலை 11.00 மணிக்கு இப்பொதுக்குழு தொடங்கியது. இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் முன்னிலையில் வகித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்கினார்.
பொதுக்குழுவில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்புரை ஆற்றினார். இதனைத் தொடர்ந்து பொதுக் குழுவில் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் தெரிவித்ததாவது..
*தமிழ்நாடு அரசு சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்த வேண்டும் . இட ஒதுக்கீடு , முல்லைப் பெரியாறு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சியினர் நமக்கு மிகப்பெரிய வெற்றியை தர வேண்டும். நடைபெற இருக்கின்ற மக்களவை தேர்தல் சம்பந்தமாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைபாட்டை விரைவில் அறிவிப்போம்.
தமிழ்நாட்டை முன்னேற்ற வேண்டும், தமிழகத்தில் சமூக நிதி நிலைநாட்ட வேண்டும், எல்லை பிரச்சினைகள், நிதி மேலாண்மை திட்டங்கள், இளைஞர்களை பாதிக்கக்கூடிய புதிய பிரச்சினை போன்றவற்றை தீர்க்க வேண்டும்.
தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஆட்சி நடைபெற வேண்டும் என, எங்களுக்கு ஒரு இலக்கு இருக்கிறது. அதன் அடிப்படையில் இப்பொழுது நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில், அதற்கு ஏற்ப வியூகங்களை நாங்கள் அமைப்போம். அந்த முடிவுகளை விரைவில் நாங்கள் அறிவிப்போம்.
நாடாளுமன்றத் தேர்தலில் இளைஞர்களுக்கும் புது முகங்களுக்கும் இந்த முறை வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தை குறித்து வெளிப்படையாக சொல்ல முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை முடிவெடுக்கும் ” என அன்புமணி தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அதிமுக சார்பாக கூட்டணிக்கான அழைப்பு வந்ததா என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ் ”வந்திருக்கலாம்” என பதிலளித்தார்.