சாத்வி ராஷ்மிகா சரஸ்வதி வயதான மௌலானாவை திருமணம் செய்து கொண்டாரா? உண்மை என்ன?
This News Fact Checked by BOOM
சாத்வி ராஷ்மிகா சரஸ்வதி வயதான மௌலானாவை திருமணம் செய்து கொண்டதாக எடிட் செய்யப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம்.
BOOM தனது விசாரணையில் அந்தக் கூற்று தவறானது என்பதைக் கண்டறிந்தது. ராஜஸ்தானின் ஹவாமஹால் தொகுதி பாஜக எம்எல்ஏ பால்முகுந்த் ஆச்சார்யாவின் புகைப்படம் வைரலானது. ஊடக அறிக்கையின்படி, இந்த புகைப்படம் டிசம்பர் 2023, அவர் முஸ்லிம் சமூக மக்களை சந்தித்தபோது எடுக்கப்பட்டது.
ஒரு பயனர் பேஸ்புக்கில் படத்தைப் பகிர்ந்து, 'சாத்வி ரஷ்மிகா சரஸ்வதி இப்போது ஒரு வயதான மௌலானாவை திருமணம் செய்து கொள்வதாக அறிவித்துள்ளார். யோசித்துப் பாருங்கள், இவ்வளவு உறுதியான இந்துப் பெண் ஒரு வயதான மௌலவியைக் காதலிக்கும்போது, முஸ்லீம் ஆண்களாகிய எங்களிடம் ஏதாவது சிறப்பு இருக்க வேண்டும்.' என பதிவிட்டுள்ளார்.
உண்மை சரிபார்ப்பு:
வைரலான புகைப்படம் திருத்தப்பட்டது
வைரலான புகைப்படத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பால்முகுந்த் ஆச்சார்யா இருப்பது கண்டறியப்பட்டது.
உரிமைகோரலைச் சரிபார்க்க, Google இல் வைரலான புகைப்படத்தின் மறுபக்கப் படத் தேடல் செய்யப்பட்டது. பாஜக எம்எல்ஏ பால்முகுந்த் ஆச்சார்யா ஒரு முஸ்லீம் நபருடன் காணப்பட்ட புகைப்படம் பல சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் ஊடகங்களில் வெளியானது தெரியவந்தது.
என்டிடிவி ராஜஸ்தானின் அறிக்கையின்படி, டிசம்பர் 4, 2023 அன்று, ராஜஸ்தானின் ஹவாமஹால் தொகுதியிலிருந்து புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்எல்ஏ பால்முகுந்த் ஆச்சார்யாவின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. அதில் அவர் ஜெய்ப்பூரில் சாலையோர அசைவ வியாபாரிகளை அச்சுறுத்துவதைக் காண முடிந்தது.
இதுதொடர்பாக பெரும் சர்ச்சை எழுந்தது. இதையடுத்து, அடுத்த நாள் நடந்த இந்த சம்பவத்திற்கு பால்முகுந்த் ஆச்சார்யா மன்னிப்பு கேட்டார். அறிக்கையின்படி, பால்முகுந்த் ஆச்சார்யா ஜெய்ப்பூரில் உள்ள எம்எம் கான் ஹோட்டலின் உரிமையாளரையும் சந்தித்தார். அங்கு அவர் இந்த ஆட்சேபனைக்குரிய கருத்தை தெரிவித்தார். பால்முகுந்த் ஆச்சார்யா ஹோட்டல் உரிமையாளரை கட்டிப்பிடித்து மாலை அணிவித்தார்.
பால்முகுந்த் ஆச்சார்யா மன்னிப்பு கேட்கும் இந்த வீடியோவை நியூஸ்18 அறிக்கையில் காணலாம். வீடியோவில், பால்முகுந்த் ஆச்சார்யா எந்த ஒரு குறிப்பிட்ட வகுப்பிற்காக இதைச் சொல்லவில்லை என்று கூறுகிறார்.
பால்முகுந்த் ஆச்சார்யா ஹோட்டல் உரிமையாளரை சந்திக்கும் படம்
பால்முகுந்த் ஆச்சார்யாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்த நபருடன் அவர் சந்தித்த படத்தையும் பகிர்ந்துள்ளது. அவரது பதிவில், 'ஹவாமஹால் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த இஸ்லாமிய சகோதரிகள் மற்றும் சகோதரர்கள் மற்றும் முழு முஸ்லிம் கமிட்டி மற்றும் முஸ்லிம் சமூகத்தின் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் என்னை வரவேற்று வெற்றிபெற வாழ்த்தினார்கள்' என பதிவிட்டுள்ளார்.
வைரலான புகைப்படத்தை NDTV மற்றும் The Wire இன் செய்திகளில் சேர்க்கப்பட்டுள்ள புகைப்படத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டது.
இது தவிர, வைரலான பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள சாத்வி ரஷ்மிகா சரஸ்வதி என்ற முக்கிய வார்த்தையுடன் கூகுளில் தேடியபோது, இந்த பெயரில் யாரையும் காணவில்லை.
Note : This story was originally published by ‘BOOM’ and translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.