கர்நாடக தேர்தலில் வெற்றிபெற இந்து - முஸ்லிம்களின் ஒற்றுமையை சிதைக்கவேண்டும் என அமைச்சர் எம்பி பாட்டீல் பேசினாரா?
This news fact checked by 'Newsmeter'
2018 கர்நாடக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற இந்து - முஸ்லிம்களின் ஒற்றுமையை சிதைக்கவேண்டும் என அம்மாநில அமைச்சர் எம்பி பாட்டீல் சோனியா காந்திக்கு எழுதியதாக பகிரப்பட்டு வரும் கடிதம் போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
கர்நாடக காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான எம்பி பாட்டீல் ஜூலை 10, 2017 அன்று சோனியா காந்திக்கு எழுதியதாக ஒரு கடிதம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது. வைரலாகும் இந்த பதிவின் தலைப்பில், “கர்நாடக தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸால் கடைப்பிடிக்கப்பட்ட ஹிந்துக்கள் - முஸ்லிம்களை ஒன்றிணைக்கும் உத்தியை பிளவுபடுத்துங்கள்” என பகிரப்பட்டுள்ளது.
இந்த கடிதத்தின் தலைப்பில், எம்பி பாட்டீல் தலைவராக இருக்கும் பிஜப்பூர் லிங்காயத் மாவட்ட கல்வி சங்கத்தின் (BLDEA) வரைவு செய்யப்பட்டதாகத் தெரிகிறது. பாட்டீல், பல அமைச்சர்களுடன் 2018 கர்நாடக சட்டசபை தேர்தலில் செயல்படுத்தப்படும் வியூகம் குறித்து குளோபல் கிறிஸ்டியன் கவுன்சில் (ஜிசிசி) மற்றும் உலக இஸ்லாமிய அமைப்பு (டபிள்யூஐஓ) ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் விரிவான விவாதம் நடத்தினார் என அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
“முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை அவர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் ஒன்றிணைப்பதன் மூலமும், இந்துக்களை சாதி/உபஜாதி மற்றும் பிரிவு/துணைப்பிரிவு அடிப்படையில் பிரிப்பதன் மூலமும் கர்நாடகாவில் ஆர்எஸ்எஸ் வளர்ச்சியை தடுக்கலாம் மற்றும் பாஜகவை வீழ்த்தலாம். இந்த நோக்கத்தை அடைய, வீரசைவ-லிங்காயத் சமூகத்தில் நிலவும் வேறுபாட்டைப் பயன்படுத்தி, முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கான சலுகைகளை எங்கள் பட்ஜெட்டிலும், பின்னர் தேர்தல் அறிக்கையிலும் அறிவிக்க முடிவு செய்யப்பட்டது.
2018-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், இந்துக்கள்-முஸ்லிம்கள் ஒன்றுபடுதல் என்ற இந்த உத்தியைக் கடைப்பிடித்து காங்கிரஸ் வெற்றி பெறும் என்று உறுதியளிக்கிறோம். உங்களின் ஆசியும் வழிகாட்டுதலும் எங்களுக்குத் தேவை” இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மற்றொரு ட்விட்டர் (எக்ஸ்) பயனர், மே 23, 2024 அன்று அந்தக் கடிதத்தைப் பகிர்ந்துள்ளார், அதில், "காங்கிரஸ் எந்த அளவிற்கு சாய்ந்துவிடும் என்பதை கவனமாகப் பாருங்கள். காங்கிரஸ் அமைச்சர் எம்பி பாட்டீல், சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தில், பாஜகவைத் தோற்கடிக்க வேண்டும் என்றால் ஹிந்துக்களைப் பிரிக்க வேண்டும் என எழுதியுள்ளார்” இவ்வாறு பகிரப்பட்டுள்ளது.
இந்த கடிதம் குறித்த உண்மை சரிபார்ப்பின்போது, இது போலியானது என்று நியூஸ்மீட்டர் கண்டறிந்தது.
உண்மை சரிபார்ப்பு:
கடிதத்தின் தலைகீழ் படத் தேடுதலில், அந்தக் கடிதம், 2018 மே மாதம் கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, நியூஸ் போர்டல் மூலம் முதலில் வெளியிடப்பட்டது என்பது தெரியவந்தது. அந்தக் கடிதம் வைரலானதை தொடர்ந்து, அந்த கடிதம் போலியானது என கூறி சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு எம்பி பாட்டீல் கோரினார்.
அவர் BLDEA அமைப்பின் அசல் லெட்டர்ஹெட்டையும், வைரலான கடிதத்தில் உள்ள லெட்டர் ஹெட்டையும் ஒப்பிட்டு, தனது ட்விட்டர் (எக்ஸ்) மற்றும் முகப்புத்தக கணக்குகளில் வெளியிட்டார். "இந்தக் கடிதம் போலியானது, அதைத் தயாரித்து வெளியிட்டவர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன். பாஜகவின் விரக்தி இதில் தெரிகிறது. அவர்கள் முழுக்க முழுக்க போலியை நம்பியிருக்கிறார்கள்” இவ்வாறு தலைப்பிட்டு அப்பதிவை வெளியிட்டிருந்தார்.
தொடர்ந்து, கடிதம் மற்றும் அதில் உள்ள கோரிக்கைகளை நிராகரிக்க செய்தியாளர் சந்திப்பை ஒன்றில் பங்கேற்றார். ஏப்ரல் 16, 2019 அன்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் வீடியோவை கர்நாடக காங்கிரஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “கடிதம் போலியானது. அதைத் தயாரித்து வெளியிட்டவர்கள் மீது போலியான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விஷயம் அதன் தர்க்க ரீதியான சட்ட முடிவு வரை தொடரும். தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக உச்ச நீதிமன்றம் செல்ல நேரிடும்” என பகிரப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டில் கர்நாடக பாஜகவின் ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில், காங்கிரஸ் இன்னும் பதவியை தங்கள் கணக்கில் வைத்திருப்பதை அம்பலப்படுத்துவதாகக் கூறி அதே கடிதத்தைப் பகிர்ந்துள்ளது. தொடர்ந்து என்டிடிவி அறிக்கையின்படி, போஸ்ட்கார்ட் நியூஸ் இணை நிறுவனர் மகேஷ் விக்ரம் ஹெக்டே மீண்டும் கைது செய்யப்பட்டதாக தெரிகிறது. முன்னதாக அவர் 2019-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.
கடிதம் புனையப்பட்டதாக அடையாளம் காணப்பட்ட போதிலும், அதன் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட போதிலும், வைரலான இந்த கடிதம் ஒவ்வொரு ஆண்டும் சமூக ஊடகங்களில் மீண்டும் மீண்டும் வைரலாகி வருகிறது. 2018 இல் முகப்புத்தகம் மற்றும் 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் ட்விட்டர் (எக்ஸ்) இல் பல்வேறு பயனர்களின் இடுகைகளிள் கடிதம் பகிரப்பட்டுள்ளது.
முடிவு:
எனவே, கர்நாடகாவில் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு இந்துக்களை பிளவுபடுத்துங்கள்-முஸ்லிம்களை ஒன்றிணையுங்கள் என்ற வியூகத்தை கோடிட்டு சோனியா காந்திக்கு எம்பி பாட்டீல் கடிதம் எழுதியதாகக் கூறுவது தவறானது என கண்டறியப்பட்டுள்ளது.
Note : This story was originally published by ‘Newsmeter‘ and Translated by ‘News7 Tamil’ as part of the Shakti Collective.