நீட் தேர்வு விலக்கு கோரி ஜூலை 3-ல் திமுக மாணவரணி ஆர்ப்பாட்டம்!
நீட் தேர்வுக்கு விலக்கு கோரி சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது. அதே வேளையில், அண்மையில் நிகழ்ந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண்கள் உள்ளிட்ட முறைகேடுகள் இந்தியா முழுக்க நீட் தேர்வு பற்றிய சலசலப்பை அதிகப்படுத்தியுள்ளது. இதனால், பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு உருவாகியுள்ளது.
தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்ட நீட் மற்றும் நெட் நுழைவுத் தேர்வுகளில் நடந்த முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய அரசைக் கோரி, நேற்று கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.
ஆனால், நீட் விலக்கு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து முதலமைச்சர் கொண்டு வந்த நீட் தேர்வு விலக்கு தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திமுக மாணவரணி செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான எழிலரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜூலை 3ல் திமுக மாணவர் அணி போராட்டம்https://t.co/WciCN2SiwX | #DMK | #YouthWing | #Protest |#NEET | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/wQxvTATOb3
— News7 Tamil (@news7tamil) June 28, 2024
“நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி ஜூலை 3-ம் தேதி திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. ஜூலை 3-ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். நீட் என்பது பாஜக அரசால் கொண்டு வரப்பட்ட சமூக நீதிக்கு எதிரான தேர்வு முறை. நீட் தேர்வில் நடைபெற்ற மோசடிகளால் இந்தியா முழுவதும் எதிர்ப்பலை கிளம்பி உள்ளது. நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டில் தொடங்கிய அதிர்வலைகள் இன்று இந்தியா முழுவதும் பரவியிருப்பதை காண முடிகிறது” என்று அந்த அறிக்கையில் எழிலரசன் எம்எல்ஏ குறிப்பிட்டுள்ளார்.