"அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்" - எடப்பாடி பழனிச்சாமி உறுதி!
மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் பிரச்சார பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் திருப்பூர் தொழில் துறையினர் விவசாயிகள் பாத்திர உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் ஜவுளி உற்பத்தியாளர்கள், அவிநாசி அத்திகடவு திட்ட விவசாயிகள், கல்குவாரி உரிமையாளர்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
இதில் தொழில்துறையினர் கூறுகையில் அமெரிக்க வரி விதிப்பால் தொழில் நலிவடைந்து உள்ளது. வட்டி மானியம், வங்கி கடன் தள்ளுபடி, ஏற்றுமதி மானியம் வழங்க வேண்டும் மத்திய தொழில் துறை அமைச்சர் மூலம் வலியுறுத்த வேண்டும். திருப்பூர் வளர்ச்சி நிதி 5 சதவீதம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர் தொடர்ந்து விவசாயிகளின் குறைகளை கேட்டு அறிந்தார்.
இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், "கோரிக்கைகளை மனுவாக வழங்கினால் நமது அரசு வந்தவுடன் நிறைவேற்றி தரப்படும். டாலர் சிட்டியில் இன்று பல்வேறு பிரச்சனைகள் உள்ளது. நீங்கள் கூறாவிட்டாலும் உங்கள் வளர்ச்சிக்கு நான் உறுதுணையாக இருப்பேன். பல்லாயிரகணக்கான கோடி அன்னிய செலவாணியை ஈட்டி தரும், பல லட்ச தொழிலாளர்கள் வாழ்வாதாரம வழங்கும் நகர் என பல்வேறு சிறப்புகள் திருப்பூருக்கு உள்ளது.
திருப்பூர் மாவட்டம் கோவை மாவட்டம் தொழில் நிறைந்த மாவட்டமாக விளங்கிக் கொண்டிருக்கிறது, பல குடும்பங்களை வாழ வைக்கின்ற பகுதியாக உள்ளது. ஆனால் இன்றைய சூழலில் அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி உயர்வு காரணமாக ஏற்றுமதி சரிந்துள்ளது. இதற்கு பாரதப் பிரதமரிடம் கோரிக்கை வைத்துள்ளேன், மேலும் மத்திய அமைச்சர்கள் மூலமாகவும் இந்த பிரச்சினையை தீர்வு காண கோரிக்கை வைத்துள்ளோம்.
இதனால் ஏற்படும் பாதிப்பு குறித்தும் எடுத்துரைத்துள்ளோம், காவிரி பிரச்சனையில் மத்திய அரசு தீர்வு காண்பதற்கு கால தாமதம் ஏற்படுத்தியது. இதற்காக 22 நாட்கள் நாடாளுமன்றத்தை புறக்கணித்தோம் அதன் பிறகு மத்திய அரசு உடனடியாக காவிரி மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தியது. எங்கள் ஆட்சியில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டது, திமுக கூட்டணியில் தான் 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
ஆனால் இங்குள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட அமைச்சரை சந்தித்து அழுத்தம் கொடுக்கவில்லை, இன்றைய தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தொழில்துறையினரின் கோரிக்கைகள் குறித்து பேசுவதில்லை. ஏன் மௌனம் சாதிக்கிறார்கள் என்று தெரியவில்லை. இனியாவது திமுக தலைவர் இதை கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏற்றுமதியாளர்களுக்கு மானியம் வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும், ஒருமுறை தொழில் சரிந்து விட்டால் அதை மீட்டெடுக்க பல காலமாகும், தொழிற்சாலை பிரச்சனைகள் மிக கவனமாக கையாள வேண்டும், உங்களது கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அதிமுக ஆட்சி காலத்தில் பாலங்கள் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்பொழுது அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இன்று வரை நான் விவசாயி தான், விவசாயம் என் உயிர் இன்றைய சூழ்நிலையில் தொழிலும் வளர வேண்டும் விவசாயமும் செழிக்க வேண்டும், அண்டை மாநில முதலமைச்சர்கள் பல்வேறு சலுகைகள் வழங்கி தொழிலை அங்கு எடுத்துச் செல்கிறார்கள்.இதை எல்லாம் நிகழ்காலத்தில் ஆய்வு செய்து நமது தொழில் அழியாத அளவிற்கு பாதுகாக்கப்படும் என தெரிவித்துள்ளார்.