பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி தலைமையில் இன்று உயர்மட்ட அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
மக்களவைத் தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயராகி வரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சியினர் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், பாஜக சார்பில் நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலில் களம் இறங்க உள்ள அக்கட்சியின் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் முதற்கட்டமாக 195 வேட்பாளர்களின் பட்டியலை பாஜக தேசியப் பொதுச் செயலாளர் வினோத் தவ்டே வெளியிட்டார்.
இதையும் படியுங்கள் : பாகிஸ்தான் பிரதமராகிறார் ஷெபாஸ் ஷெரீஃப்! – நாளை 2-வது முறையாக மீண்டும் பதவியேற்பு!
இதையடுத்து, நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், டெல்லியில் உள்ள சுஷ்மா சுராஜ் பவனில், பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருப்பதால் இந்தக் கூட்டம் முக்கியமான கூட்டமாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இரண்டாம் முறை பதவியேற்ற பிரதமர் மோடி அமைச்சரவையின் கடைசி கூட்டமாக இது இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த அமைச்சரவை கூட்டத்தில், மக்களவை தேர்தலுக்கு முன் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலுக்கு வரும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்கனவே கூறியிருந்த நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,விவசாயிகள் போராட்டம் குறித்து இன்றைய உயர்மட்ட அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.