#DelhiCM | நாளை மறுநாள் முதலமைச்சராக பதவியேற்கிறார் அதிஷி!
டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி நாளை மறுநாள் (செப். 21) பதவியேற்கவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது.
மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையாலும், பின்னர் சிபிஐயாலும் கைது செய்யப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, கடந்த 13ம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. தொடர்ந்து கிட்டத்தட்ட 6 மாத சிறைவாசத்துக்கு பிறகு கடந்த வாரம் விடுதலையானார் அரவிந்த கெஜ்ரிவால்.
முதலமைச்சர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது, ஆவணங்களில் கையெழுத்து போடக்கூடாது உள்ளிட்ட பல நிபந்தனைகளை உச்சநீதிமன்றம் விதித்ததால், முதலமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய இருப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்திருந்தார்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் காலை 11.30 மணியளவில் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிறகு கல்வித்துறை அமைச்சராக இருக்கும் அதிஷி, டெல்லியின் அடுத்த முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த சூழலில், அரவிந்த் கெஜ்ரிவால் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தை வழங்கினார். அதே நேரத்தில் அதிஷி டெல்லி துணைநிலை ஆளுநரை சந்தித்து புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இந்த சூழலில், அதிஷி நாளை மறுநாள் (செப். 21) டெல்லியின் புதிய முதலமைச்சராக பதவியேற்கவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. அதே நாளில், அதிஷி தலைமையிலான புதிய அமைச்சரவையும் பதவியேற்கவுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஷீலா தீட்சித் மற்றும் பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருக்குப் பிறகு டெல்லியின் 3-வது பெண் முதலமைச்சராக அதிஷி பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.