இன்று மீண்டும் தொடங்கும் ‘டெல்லி சலோ’ பேரணி - தடுப்புகளை முறியடிக்க விவசாயிகள் புதிய வியூகம்!
‘டெல்லி சலோ’ போராட்டம் இன்று (பிப். 21) மீண்டும் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், புதிய வகை ஆயுதங்களுடன் டெல்லிக்குள் நுழைய விவசாயிகள் தயாராகிவருகின்றனர்.
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200-க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் கடந்த பிப்.13 ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியை நோக்கி பேரணி நடத்தினர். இதற்காக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பலரும் டெல்லியை நோக்கி புறப்பட்டு வந்தனர்.
இதனையடுத்து டெல்லி நோக்கி முன்னேறிய விவசாயிகள் மீது போலீசார் சரமாரி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் டெல்லி- அம்பாலா நெடுஞ்சாலையில் அதாவது பஞ்சாப்-ஹரியானா எல்லையில் சம்பு என்ற இடத்தில் டெல்லி நோக்கி பல்லாயிரக்கணக்கான டிராக்டர்களில் சென்று கொண்டிருந்த விவசாயிகளை போலீசாரும் துணை ராணுவப் படையினரும் தடுத்து நிறுத்தினர். ஆனால் போலீசார் தடையை உடைத்து விவசாயிகள் டெல்லி நோக்கி முன்னேறினர்.
இதனிடையே விவசாயிகள் சங்கத்தினர் மத்திய அரசுடன் கடந்த 8, 12,16 மற்றும் 18-ம் தேதிகளில் நடத்திய 4 கட்ட பேச்சுவார்த்தையில் எந்தவித தீர்வு ஏற்படவில்லை. எனவே, கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்தனர். 4-ம் கட்ட பேச்சுவார்த்தையின் போது மத்திய அரசு, விவசாயிகளுக்கு சில முன்மொழிவுகளை அளித்தது. அதாவது, பருப்பு வகைகள், மக்கா சோளம், பருத்தி உள்ளிட்டவைகளுக்கு 5 ஆண்டுகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை அளிக்கப்படும் எனக் கூறியது.
அதாவது விவசாயிகளின் பயிர்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை அளிக்க கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார். ஆனால் மத்திய அரசு முன்மொழிந்த திட்டங்களை விவசாயிகள் நிராகரித்தனர். இதன் காரணமாக இன்று (பிப். 21) காலை 11 மணி முதல் டெல்லி நோக்கி செல்வோம், பேரணியை மீண்டும் தொடங்குவோம் என்று விவசாயிகள் கூறியுள்ளனர்
விவசாயிகள் மீண்டும் போராட்டம் நடத்த இருப்பதால் டெல்லி எல்லையில் பலத்த பாதுகாப்பை போலீசார் ஏற்படுத்தியுள்ளனர். டெல்லி எல்லையில் விவசாயிகள் நுழைவதை தடுப்பதற்காக இரும்புத் தடுப்புகள், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்புகளை முறியடித்து உள்ளே செல்வதற்காக விவசாயிகள் பொக்லைன் இயந்திரங்கள் உள்ளிட்ட வாகனங்களுடன் எல்லைக்கு வந்துள்ளனர். போலீசார் வீசும் கண்ணீர் புகைக்குண்டு, ரப்பர் குண்டுகளில் இருந்து தப்பிப்பதற்காக இரும்பிலான தகர தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.
Heavy machinery and enforced bunker/s moving towards Shambhu border by protestors from AAP ruled punjab state as the Delhi chalo march resumes tomorrow.
How can the state govt allow this? This cannot be prepared overnight! pic.twitter.com/vspkCI7CMA
— Ramesh Mhatre (@AarMhatre) February 20, 2024
விவசாயிகள் டிராக்டர் உள்பட விவசாயத்திற்கு பயன்படுத்தும் இயந்திரங்களை மாற்றி வித்தியாசமாக எல்லைக்கு கொண்டு வருவதால், அதைப்பார்ப்பதற்காக தனியாக மக்கள் கூட்டம் கூடி வருகின்றனர். விவசாயிகள் தங்கள் போராட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று காலை 11 மணி வரை போலீசாருக்கு அவகாசம் அளித்துள்ளனர். இந்த மாபெரும் பேரணியை சம்யுக்தா கிசன் மோர்ச்சா நடத்துகின்றது. மக்களவைத் தேர்தல் தொடங்க உள்ள நிலையில், விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்த இருப்பது மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.