‘டெல்லி சலோ’ விவசாயிகள் பேரணி: 5-ம் கட்ட பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைப்பு!
டெல்லி சலோ பேரணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை, மத்திய அரசு 5-ம் கட்ட பேச்சு வார்த்தைக்கு அழைத்துள்ள நிலையில், அதனை நேரம் கடத்தும் செயல் என விவசாயிகள் விமர்சித்துள்ளனர்.
பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் புதிய சட்டத்தை இயற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா உள்ளிட்ட 200-க்கும் அதிகமான விவசாய சங்கங்கள் கடந்த பிப்.13 ‘டெல்லி சலோ’ என்ற பெயரில் மத்திய அரசுக்கு எதிராக டெல்லியை நோக்கி பேரணி நடத்தினர். இதற்காக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் பலரும் டெல்லியை நோக்கி புறப்பட்டு வந்தனர்.
இதனையடுத்து டெல்லி நோக்கி முன்னேறிய விவசாயிகள் மீது போலீசார் சரமாரி கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் டெல்லி நோக்கி பல்லாயிரக்கணக்கான டிராக்டர்களில் சென்று கொண்டிருந்த விவசாயிகளை போலீசாரும் துணை ராணுவப் படையினரும் தடுத்து நிறுத்தினர். ஆனால் போலீசார் தடையை உடைத்து விவசாயிகள் டெல்லி நோக்கி முன்னேறினர்.
இதற்காக கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார். ஆனால் மத்திய அரசு முன்மொழிந்த திட்டங்களை விவசாயிகள் நிராகரித்தனர். இதன் காரணமாக இன்று (பிப். 21) காலை 11 மணி முதல் டெல்லி நோக்கி செல்வோம், பேரணியை மீண்டும் தொடங்குவோம் என விவசாயிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் விவசாயிகளை 5ம் கட்ட பேச்சுவார்த்தைக்காக மத்திய அரசு அழைத்துள்ளது. மத்திய வேளாண் துறை அமைச்சர் அர்ஜூன் முண்டா இந்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். ஆனால், விவசாய சங்கங்கள் இதனை, "நேரம் கடத்தும் செயல். அதனால்தான் எங்களை மீண்டும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார்கள்" என்று விமர்சித்துள்ளன.
நாடாளுமன்றத்தை கூட்டி குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு அவை நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.